அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு எதிராக போராட்டம் அறிவிக்கப்படும் என ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் தெரிவித்து உள்ளார். துப்புரவு பணியாளர்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், (மார்ச் 24) நேற்று அவரது இல்லத்தில் சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்நிலையில், ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒட்டுமொத்த தூய்மைப் பணியாளர்களை அதிர்ச்சிர்க்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும், தூய்மைப் பணியாளர்களை குடிகாரர்களைப்போல் சித்தரித்து பேசிய சவுக்கு சங்கரை ஆதித் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தூய்மைப் பணியாளர்களாக உள்ள அருந்ததியர்களுக்காகத்தான் 3% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதை சுட்டிக் காட்டிய அவர், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் இறந்துபோனவர்களின் சடலங்களை அப்புறப்படுத்துவதற்கு மத்திய அரசின் மூலம் வந்திருந்த ராணுவப் படையினர் கூட மறுத்துவிட்ட நிலையில், இங்கிருக்கின்ற தூய்மைப் பணியாளர்கள்தான் அந்த உடல்களை அப்புறப்படுத்தியதாக தெரிவித்தார்.
இந்தச் சூழலில், ஒட்டுமொத்த சமுதாயத்தையே குடிகாரர்களாகச் சித்தரிக்கும் பணியை செய்திருக்கின்ற காரணத்தினால் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்திருப்பதாக தெரிவித்தார். அது அவருடைய Action க்கு Reaction நடந்திருப்பதாக அதியமான் விமர்சித்தார். கடந்த காலங்களில் சீமான் போன்றவர்கள் அருந்ததிய மக்களை வந்தேறிகள் என்றும், தூய்மைப் பணி செய்வதற்காகதான் அழைத்துவரப்பட்டார்கள் என்றும் பேசி அதற்கான எதிர்வினையை எதிர்கொண்டதாகத் தெரிவித்த அதியமான், தற்பொழுது அதுபோன்ற செயல்களை செய்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய சில விஷயங்களைதான் அவர்கள் பேசுவதாகவும் ஆனால், மத்திய அரசியல் நடக்கும் விஷயங்களைப் பற்றி பேசுவதாக தெரியவில்லை எனக் கூறினார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடுக்கலாம் எனத் தெரிவித்த அவர் அதுபற்றி இன்று மாலைக்குள் தெரியவரும் என கூறினார். கடந்த காலங்களில் சவுக்கு சங்கர் பெண்களை கூட கேவலமாக பேசி இருக்கிறார் குறிப்பாக அருந்ததிய மக்களை மட்டுமே குறிவைத்து செய்வதாகவும் குற்றம்சாட்டிய அவர், வேறு சமுதாய மக்களை தாக்குவதற்கு இவர்களுக்கு தைரியம் கிடையாது என்றார்.
யார் வீட்டில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தாலும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல எனத் தெரிவித்த அவர் ஆனால், இதுபோல இழிவுபடுத்தும் போது அம்மக்களின் மத்தியில் கோபம் எழுகிறது எனவும் அதேசமயம் இவர்கள்தான் இதனை செய்தார்களா என்று தெரியவில்லை என தெரிவித்தார். அரசியல் விமர்சகர் என்ற முறையில் அவர் மிகவும் கவனத்துடன் பேச வேண்டும், எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற தோணி ஏற்புடையது அல்ல எனத் தெரிவித்தார். மேலும் இதுபோன்று இனிவரும் காலங்களிலும் பேசுவாரேயானால் ஆதித்தமிழர் பேரவை அவரை எதிர்த்து போராட்டங்களை அறிவிக்கும் என தெரிவித்தார்