அத்திவரதரை வைக்கப்போகும் ஆனந்தசரஸ் குளத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிசோதிக்கப்பட்ட நீரை மட்டுமே நிரப்ப வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அத்திவரதரை ஆனந்த்சரஸ் குளத்தில் வைப்பதற்கு முன்பாக குளத்தை தூர்வார கோரி அசோகன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, ஆனந்த்சரஸ் குளம் குறித்து தொல்லியல் ஆய்வு துறையும், நிரப்பப்படும் நீர் குறித்த ஆய்வு முடிவுகளை மாசு கட்டுப்பாட்டு வாரியமும், பொதுவான நடவடிக்கை குறித்த அறிக்கையை இந்துசமய அறநிலையத்துறை உயர் மட்டக்குழுவும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, தொல்லியல் துறை தாக்கல் செய்த அறிக்கையில், குளம் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளதாகவும், ஆனால் மணல் மூட்டைகள் அகற்றப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, குளத்தில் ஊற்றப்போகும் நீரின் தன்மை குறித்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், நீரில் உள்ள நுண்துகள்கள் வளரக்கூடியதா என்பதை ஆய்வு செய்ய மூன்று நாட்களாகும் என்பதால், ஆகஸ்ட் 19ல் அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்வதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளித்தது.
காவிரி நீரை சுத்தப்படுத்தி குளத்தை நிரப்பலாம் என அண்ணா பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளதாகவும், கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னதி அருகேயுள்ள ஆழ்துளை கிணற்று நீரையும் நிரப்ப முடியும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொற்றாமரை குளத்து நீரையும் சுத்தப்படுத்தி நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எந்த நீராக இருந்தாலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு குளத்தில் நிரப்ப வேண்டும் என அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இன்று முதல் தினசரி அடிப்படையில் புகைப்படம் எடுத்து தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
ஆழ்துளை கிணறு நீரை இன்றே சோதனைக்கு அனுப்பவும், அதன் சோதனை முடிவுகள் உள்ளிட்ட அனைத்தின் இடைக்கால ஆய்வு முடிவுகளை ஆகஸ்ட் 16ல் தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.பின்னர் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதி மதியம் 2:15க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.