Advertisment

தமிழகத்தில் ஆவின் நெய் விலை தாறுமாறாக உயர்வு: பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.100 வரை உயர்வு. இது மக்களுக்கான அரசா..? இல்லை மக்கள் விரோத அரசா..? - பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்

author-image
WebDesk
New Update
அண்ணாமலை புகார்; பொய்களை அடுக்கும் அமைச்சர்கள்: பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காமல் பால் மற்றும் நெய், வெண்ணெய், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் உபபொருட்களின் விற்பனை விலையை மறைமுகமாகவும், நேரடியாகவும் உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் பாரத்தை சுமத்துவதையே தொடர் வாடிக்கையாக கொண்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில்  பொதுமக்களுக்கு மேலும் பேரதிர்ச்சி தரக்கூடிய வகையில் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் கூட்டுறவு பால் நிறுவனங்களான அமுல், நந்தினியை விட அதிகமாகவும்,  தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாகவும் உயர்த்துகின்ற வகையில் நெய் விற்பனை விலையை 100மிலி பாக்கெட் 70.00 ரூபாயிலிருந்து 80.00 ரூபாயாகவும், ஜார் 75.00 ரூபாயிலிருந்து 85.00 ரூபாயாகவும், 200மிலி ஜார் 145.00 ரூபாயிலிருந்து 160.00 ரூபாயாகவும், 500மிலி பாக்கெட் 310.00 ரூபாயிலிருந்து 360.00 ரூபாயாகவும், ஜார் 315.00 ரூபாயிலிருந்து 365.00 ரூபாயாகவும், 1லிட்டர் பாக்கெட் 620.00 ரூபாயிலிருந்து 690.00 ரூபாயாகவும், ஜார் 630.00 ரூபாயிலிருந்து 700.00 ரூபாயாகவும் என ஒரு லிட்டருக்கு 70.00 ரூபாய் முதல் 100.00ரூபாய் வரையிலும்,

வெண்ணெய் 100கிராம் 55.00 ரூபாயிலிருந்து 60.00 ரூபாயாகவும், சமையல் வெண்ணெய் 500கிராம் 260.00 ரூபாயிலிருந்து 275.00 ரூபாயாகவும், உப்பு வெண்ணெய் 500கிராம் 275.00 ரூபாயிலிருந்து 280.00 ரூபாயாகவும் என ஒரு கிலோவுக்கு 30.00 ரூபாய் முதல் 50.00ரூபாய் வரையிலும் உயர்த்தப்படுவதாகவும், இந்த விற்பனை விலை உயர்வு உடனடியாக இன்று (14.09.2023) முதல் அமுலுக்கு வருவதாகவும் சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (அமுல் நெய் 1லிட்டர் 650.00 ரூபாய், நந்தினி 1லிட்டர் நெய் 610.00 ரூபாய்)

தனியார் நிறுவனத்தை விட அதிக விலை 

ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. வினித் ஐ.ஏ.எஸ் அவர்களின் நெய், வெண்ணெய் விற்பனை விலை உயர்வு குறித்த சுற்றறிக்கை கடும் பேரதிர்ச்சி அளிப்பதோடு, தனியார் பால் நிறுவனங்களின் நெய் விற்பனை விலைக்கு இணையான விலை நிர்ணயம் செய்யும் இந்த முடிவானது தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக, ஆவின் நெய், வெண்ணெய் விற்பனையை சரிவடையச் செய்து ஆவினை அழிக்கக் கூடிய செயலாகவே தெரிகிறது, 

நெய், வெண்ணெய் விற்பனை விலை உயர்வினை பொதுமக்களுக்கு தெரிவிக்க பால் முகவர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுக்காமல் விற்பனை விலை உயர்வு தொடர்பான உத்தரவில் 13ம் தேதி கையெழுத்திட்டு, அதனை மறுநாளே அதாவது 14ம் தேதியே அமுல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருப்பது இதுவரை எந்த ஒரு நிர்வாக இயக்குனரும் எடுக்காத மக்கள் விரோத நடவடிக்கையை சர்வாதிகாரியைப் போல் எடுத்துள்ள வினித் ஐஏஎஸ் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, அவரை உடனடியாக அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

மேலும் தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து தொடர்ந்து வருவதாலும் ஆவின் நெய் தனியார் பால் நிறுவனங்களை விட விற்பனை விலை குறைவாக இருப்பதாலும் ஆவின் நிறுவனத்தின் நெய்க்கான தேவை தமிழகம் முழுவதும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. இதனால் தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக நெய் விற்பனை விலையை உயர்த்த ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது எனவும்,

அதற்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதிகமாக நெய் விற்பனை செய்யும் தனியார் பால் நிறுவனம் எது ..?, அதன் விலை என்ன..?, மொத்த விநியோகஸ்தர்கள், முகவர்கள், சில்லறை வணிகர்களுக்கான கமிஷன் தொகை (லாபம்) எவ்வளவு வழங்கப்படுகிறது..?, ஆவின் நெய் விற்பனை விலையை எவ்வளவு உயர்த்தலாம்..? என்பன உள்ளிட்ட பல்வேறு விபரங்களை கேட்டு 27மாவட்ட ஒன்றியங்களின் பொதுமேலாளர்களுக்கு ஆவின் நிர்வாக இயக்குனர் கடிதம் அனுப்பியிருப்பதையும்,

திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டரை ஆண்டுகளில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு வெறும் 3.00ரூபாய் மட்டும் உயர்த்தி வழங்கியதும், அதனை தொடர்ந்து பால் விற்பனை விலையை லிட்டருக்கு 12.00ரூபாய் உயர்த்தியதோடு, நெய்க்கு மூலப்பொருளான வெண்ணெய் விற்பனை விலையை கடந்த 2020ல் இருந்து மூன்று ஆண்டுகளில் ஒரு முறை கிலோவிற்கு 30.00ரூபாய் மட்டும் உயர்த்தி விட்டு, நெய் விற்பனை விலையை கடந்த 2022ம் ஆண்டில் 9மாதங்களில் மட்டும் மூன்று முறை (மார்ச் -2022ல் 20.00ரூபாய், ஜூலை -2022ல் 45.00ரூபாய், டிசம்பர் 2022ல் 50.00ரூபாய்) லிட்டருக்கு 115.00ரூபாய் வரை உயர்த்தியிருந்த நிலையில் தற்போது நான்காவது முறையாக நெய் விற்பனை விலையை உயர்த்த ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கடந்த 10.09.2023அன்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முன்னெச்சரிக்கை செய்து தமிழக அரசுக்கு கோரிக்கை முன் வைத்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அது உண்மையாகியிருப்பதும், முன்னெச்சரிக்கையை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் பொதுமக்கள் மீது தொடர்ந்து நிதிச்சுமையை சுமத்தி வருவதும் வேதனைக்குரிய விசயமாகும்.

மறைமுக விலை உயர்வு 

கடந்த 2021ல் ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து ஆவினுக்கான பால் கொள்முதலில் திட்டமிட்டு கோட்டை விட்ட திமுக அரசு, ஆவினில் கையிருப்பில் இருந்த சுமார் 10ஆயிரம் டன் வெண்ணெய், 25ஆயிரம் டன் பால் பவுடரை குறைந்த விலைக்கு தனியாருக்கு தாரை வார்த்ததுடன், சரிவடைந்த பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வட மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து வெண்ணெய், பால் பவுடர் வாங்கி அதன் மூலம் பால் உற்பத்தி செய்து வருவதுடன் ஆவினுக்கு பலகோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி வருவது   குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி கடந்த பிப்ரவரி மாதம் முதல் 4.5% கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட (பச்சை நிற பாக்கெட்) பாலில் 1% குறைத்து 3.5% கொழுப்பு சத்துள்ள பாலினை அதே விற்பனை விலையில் ஊதா நிற பாக்கெட்டில் அறிமுகம் செய்து பொதுமக்கள் தலையில் மறைமுகமாக லிட்டருக்கு 8.00ரூபாய் விற்பனை விலையை உயர்த்தியதோடு, அந்த வகை பாலினை தான் வாங்கியாக வேண்டும் என பால் முகவர்களையும், பொதுமக்களையும் வலுக்கட்டாயமாக நிர்பந்தம் செய்வதை கோவையில் தொடங்கி வைத்து தற்போது தமிழகம் முழுவதும் அமுல்படுத்தி வருகிறது.

மேலும் நெய் விற்பனை விலையை ஒரே ஆண்டில் (9மாதங்களில்) லிட்டருக்கு 115.00ரூபாய் உயர்த்தி இதுவரை எந்த அரசும் செய்யாத வரலாற்று சாதனையை மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு செய்த நிலையில் தற்போது அந்த சாதனையையும் அதாவது 9மாதங்களில் மூன்று முறையாக உயர்த்தப்பட்ட விற்பனை விலையை ஒரேயடியாக லிட்டருக்கு 100.00ரூபாயும், வெண்ணெய் விற்பனை விலையை ஒரு கிலோவுக்கு 50.00ரூபாய் வரையிலும் உயர்த்தி தனது முந்தைய சாதனையை முறியடித்து மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ள திமுக அரசுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. 

விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் 

அத்துடன் இதுவரை ஆவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நெய் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு 100.00ரூபாய் ஒரேயடியாக உயர்த்தி "ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்" என்பதைப் போல  உயர்த்தப்பட்டிருப்பது மக்கள் விரோத செயலன்றி வேறில்லை என்பதால் இந்த விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், மக்கள் விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபடுமானால் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை தமிழக அரசுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முன்னெச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறது.

அத்துடன் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதாலும், ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கும் நெய் பயன்பாடு அதிகளவில் தேவைப்படும் சூழலில் ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த வரலாறு காணாத விற்பனை விலை உயர்வை இன்று (14ம் தேதி) முதல் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு மக்கள் தலையில் மிகப்பெரிய நிதிச் சுமையை சுமத்தியுள்ள ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கினை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி அதனை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்  வலியுறுத்துகிறது.

இல்லையெனில் ஒரு காலத்தில் மின்சாரத்தால் ஆட்சியை பறிகொடுத்த திமுக நடப்பாட்சியில் இப்படியே சென்றால் இந்த முறை பால்வளத்துறையால் ஆட்சியை மட்டுமல்ல பாராளுமன்ற தேர்தலிலும் வெறறியை பறிகொடுப்பதை தவிர்க்க முடியாது என்பதை தமிழக முதல்வரின் தனி கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Aavin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment