ஆவின் பால் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே கடந்த சில நாட்களாக கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் சமூக வலைதளங்களில் மாறி மாறி கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தன்னைப் பற்றி விமர்சித்ததாக கூறி அவருக்கு எதிராக அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடைபெறுவதாக, தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த மனோ தங்கராஜ், "இதில் உண்மை தன்மை இல்லை. வட மாநிலங்களில் உள்ள நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, வட மாநில நிறுவனத்திடம் இருந்து கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்துக்கு எதிராக பேசுகின்றனர்" என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் பரஸ்பரம் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், அமைச்சர் மனோ தங்கராஜ் மானநஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாயை ஆவின் வைப்பு நிதிக்கு வழங்க வேண்டும் என்றும், அண்ணாமலை குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 15 நாட்களில் மன்னிப்பு கோரவும், மான நஷ்ட ஈடு வழங்கவும் தவறும் பட்சத்தில், சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும் எனவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“