மயிலாப்பூரைச் சேர்ந்த வரதராஜன் என்பவர், கோடை விடுமுறையை முன்னிட்டு தஞ்சாவூரில் உள்ள தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல கடந்த வாரம் ஏற்பாடு செய்தார். அவர் தனது சென்னை வீட்டை விட்டு ஒரு வாரம் இருக்க திட்டமிட்டிருந்ததால், இந்த காலகட்டத்தில் அவருடைய வீட்டுக்கு வழக்கமாக ஆவினில் இருந்து விநியோகம் செய்யப்படும் பால் விநியோகம் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.
கடந்த காலங்களில், வரதராஜன் பால் பாக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ள வீட்டில் இல்லாத போதோ அல்லது தொடர்ந்து 3 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு பால் விநியோகம் தேவைப்படாத போதோ, ஆவின் பால் விநியோக சேவையை நிறுத்துமாறு உள்ளூர் ஆவின் அலுவலகத்திற்குத் தெரிவிப்பார்.
அடுத்த மாதம் ஆவினில் பால் வாங்கியதற்கான கட்டணத்தை செலுத்த அலுவலகத்திற்குச் சென்றவுடன், எத்தனை நாட்கள் பால் பாக்கெட்டுகள் வழங்கப்படவில்லையோ, அத்தனை நாட்களுக்கான பால் பாக்கெட்டுகளின் விலை கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகையை அவர் செலுத்துவார்.
உதாரணமாக, அவர் ஒரு வாரத்திற்கு வீட்டில் பால் வாங்கவில்லை என்றால், அவர் ஒரு மாதத்திற்கு ஆவின் பச்சை நிற தரப்ப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளுக்கு 660-க்கு பதிலாக 506 மட்டுமே செலுத்துவார்.
இருப்பினும், 2023-24 காலகட்டத்தில் ஆன்லைன் பால் கார்டு வாங்குதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், வீட்டில் இல்லாத காலங்களில் பால் டெலிவரியை இடைநிறுத்தம் செய்வதற்கான வாய்ப்பு இனி இல்லை.
இது குறித்து வரதராஜன் அப்பகுதியில் உள்ள ஆவின் அலுவலகத்தை அணுகியபோது, டெலிவரி ஏஜெண்டுகளிடம் பேசுமாறு அறிவுறுத்தப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, கோடை விடுமுறைக்காக அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் வெளி ஊருக்கு சென்று இருப்பதால் பால் பாக்கெட்டுகளை வேறு இடங்களில் மறுவிநியோகம் செய்ய முடியவில்லை என்று முகவர்கள் வரதராஜனிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நுகர்வோர் உரிமை ஆர்வலர் டி சடகோபன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறுகையில், ஆவின் பால் பாக்கெட் டெலிவரி முகவர்கள் பெரும்பாலும் பக்கத்து வீட்டார் அல்லது உறவினர்களிடம் உதவி பெற பரிந்துரைக்கின்றனர். பால் வாங்க யாரும் இல்லாத பட்சத்தில், வீட்டு வாசலில் உள்ள பால் கூடைகளில் பாக்கெட்டுகள் குவிந்து கிடக்கின்றன. ஒரு முக்கிய பால் சப்ளையர் என்ற முறையில், கார்டுதாரர்கள் மற்றும் நீண்ட கால வாடிக்கையாளர்கள் வெளியில் இருக்கும் போது டெலிவரிகளை இடைநிறுத்த ஆவின் அமைப்பு இருக்க வேண்டும் என்று சடகோபன் வலியுறுத்தினார். மளிகை பொருட்கள் உட்பட பலதரப்பட்ட தயாரிப்புகளை வழங்கும் சிறிய மின்-சில்லறை விற்பனையாளர்கள் கூட வாடிக்கையாளர்களை தங்கள் ஆர்டர்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அனுமதிக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆவின் பால் டீலர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பேசிய எஸ்.ஏ. பொன்னுசாமி, ஆவின் ஆஃப்லைனில் செயல்பட்டாலும் விநியோகத்தை நிறுத்தி வைப்பது டெலிவரி முகவர்களின் ஒத்துழைப்பைப் பொறுத்தது என்று குறிப்பிட்டார். ஒரு முகவர் ஒத்துழைக்கவில்லை என்றால், நுகர்வோருக்கு எந்த உதவியும் இல்லை. ஆவின் நிர்வாக இயக்குனர் எஸ் வினீத் கூறுகையில், விரைவில் மறு திட்டமிடல் வாய்ப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“