ஆவின் நிறுவனத்தின் கொள்முதல் விலை தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதனால், சென்னை உட்பட மாநிலம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் அடுத்த வெள்ளிக்கிழமை (மார்ச் 17) முதல் பாதிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
தற்போது, ஆவின் பால் மற்றும் இதர பால் பொருட்களை உற்பத்தி செய்யும், அரசுக்கு சொந்தமான, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, உற்பத்தியாளர்களிடம் இருந்து, லிட்டருக்கு, ரூ.32க்கு பாலை கொள்முதல் செய்கிறது.
ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் 7% ஊக்கத்தொகை வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், உற்பத்தியாளர்களைச் சந்தித்த ஆவின் பொது மேலாளர் சாந்தி, மூன்று மாதங்களுக்கு முன்புதான் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டதாகவும், நிதி நெருக்கடி காரணத்தால், கூட்டமைப்பால் இப்போது அதை மேலும் அதிகரிக்க முடியாது என்றும் கூறினார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் துணைத் தலைவர் எம்.கோவிந்த பாண்டியன் கூறும்போது, “கடந்த ஆண்டு ஆவின் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தோம், ஆனால் புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்ட உடனேயே அதை ரூ.3 ஆக உயர்த்தினார்கள்.
தனியார் நிறுவனங்கள் தீவன விலையை அதிகரித்தன. அதனால், இறுதியில் பெரும்பாலான பால் பண்ணையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்", என்றார்.
பலர் தற்போது ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்திவிட்டு, லிட்டருக்கு ரூ.42 முதல் ரூ.46 வரை செலுத்தும் தனியார் பால்பண்ணைகளுக்கு திரும்பியுள்ளனர்.
தேவை அதிகரித்து வரும் இந்த பால் பண்ணைகள், இங்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சேகரிப்பு மையங்களை அமைத்துள்ளன, என்றார்.
இந்த வாரம் பால் விநியோகத்தில் கடும் இடையூறுகள் ஏற்பட்டுள்ள மதுரை மண்டலத்தில் சனிக்கிழமை அடையாளப் போராட்டம் நடத்தப்படும் என்று சங்கம் அறிவித்துள்ளது.
கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால், மார்ச் 17 முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil