ஆவின் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் நெய்யின் விலையை இன்று முதல் அதிகப்படுத்தியுள்ளது.
இந்தாண்டு ஆவின் நிறுவனம் தங்களின் பொருட்களின் விலையை அதிகரித்து வருகிறது. ஐஸ் கிரீம், தயிர், நெய், ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் உள்ளிட்டவைகளுக்கு விலை அதிகரிக்கப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒரு லிட்டர் ஆவின் நெய்யின் விலை ரூ.580யில் இருந்து ரூ.630 உயர்த்தப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் கூறியதாவது, "நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.50 உயர்த்துவதாக ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதாலும், சபரிமலை ஐயப்பன் சாமி பக்தர்களுக்கும் நெய் பயன்பாடு அதிகளவில் தேவைப்படும் சூழலில் ஏழை, எளிய, நடுத்தர மக்களை இந்த விலை உயர்வு கடுமையாக பாதிக்கும்.
இந்த வரலாறு காணாத விற்பனை விலை உயர்வை இன்று முதல் உடனடியாக அமல்படுத்தி மக்களுக்கு நிதிச் சுமையை வழங்கும் நிறுவனம் மீது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
ஆவின் பால் விலை கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் ஆவின் நெய் இன்று லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது நுகர்வோர்களை கவலையடைய வைக்கிறது.
பால் விலையை தொடர்ந்து நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. 100 மில்லி லிட்டர் நெய் ரூ.5 உயர்வும், 200 மில்லி லிட்டர் ரூ.15 உயர்வும், 500 மில்லி லிட்டர் நெய் ரூ.25 உயர்வடைந்துள்ளது.
புதிய விலையில் ஆவின் நெய் இன்று முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil