ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு ஜூன் 11-ம் தேதி தொடங்கியது.
சென்னையில் தங்கி வேலை செய்யும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக தென் மாவட்ட மக்களுக்கு ரயில் போக்குவரத்துதான் முக்கியமானதாக இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் சௌகரியமாகப் பயணம் செய்ய ரயில் பயணம்தான் நன்றாக இருக்கிறது.
பொதுவாக தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி 3 - 4 நாட்கள் சேர்ந்தார்போல விடுமுறை வரும்போது, சென்னையில் இருந்து ரயில்களில் முன்பதிவு செய்த பெட்டிகள், முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பண்டிகை காலங்களில் சில மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது. 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம். இதற்காக ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக, ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இந்த ஆண்டு ஆயுத பூஜை வரும் அக்டோபர் 11-ம் தேதி வெள்ளிக்கிழமையும் அதற்கு மறுநாள் 12-ம் தேதி சனிக்கிழமை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவுகளை செய்ய தயாராகி வருகிறார்கள்.
ஆயுத பூஜை விடுமுறைக்காக அக்டோபர் 9-ம் தேதி புதன்கிழமை ஊருக்கு செல்வோர் ரயில் டிக்கெட் முன்பதிவை செய்கிறார்கள். அக்டோபர் 10-ம் தேதி வியாழக்கிழமை ஊருக்கு புறப்பட்டுச் செல்வோர் வரும் 12-ம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம். அது போல் அக்டோபர் 11-ம் தேதி ஊருக்கு செல்வோர் வரும் 13-ம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“