சென்னை பூங்கா ரயில் நிலையத்தில், ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வோரை, நாய் ஒன்று குரைத்தபடி எச்சரிக்கை செய்யும் செயல் அனைவரையும் கவர்ந்து உள்ளது. இந்த நாயின் வீடியோவை, மத்திய ரயில்வே துறை அமைச்சகம், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கவுரவப்படுத்தியுள்ளது..
Chinnaponnu, a dog, who was abandoned at station two years ago is seriously offering her services in assisting RPF in warning passengers illegally crossing the track and travelling on footboard at Chennai Railway station. pic.twitter.com/ub2gMXNB2t
— Ministry of Railways (@RailMinIndia) November 17, 2019
கடந்த சில ஆண்டுகளாக சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் சுற்றி வரும் சின்னப்பொண்ணு, யாருக்கும் எந்த தொந்தரவும் தருவதில்லை. மாறாக படியில் தொங்கியபடி ரயிலில் பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்கிறது. நடைமேடையில் படுத்திருக்கும் சின்னப்பொண்ணு ரயில் வரும் போது எழுந்து நிற்கிறது. படியில் தொங்கியபடி வருபவர்களை பார்த்து குரைத்தபடி ரயிலை துரத்திக் கொண்டு ஓடுகிறது. படியில் தொங்குபவர்களை மட்டுமல்ல, தண்டவாளத்தை கடப்பவர்களையும் சின்னப்பொண்ணு விட்டு வைக்கவில்லை. அவர்களைப் பார்த்து குரைக்கிறது. அதைக்கண்டு படியில் தொங்குபவர்கள் உள்ளே செல்கிறார்கள். மேலும் சின்னப்பொண்ணு காவலர்களோடு சேர்ந்து ரோந்து செல்கிறது. இப்படி ஒவ்வொரு ரயிலுக்குப் பின்னும் ஓடி ஓடி பலரின் உயிரைக் காக்கிறது சின்னப்பொண்ணு.
இது குறித்து, சென்னை பூங்கா ரயில் நிலையத்தின் போலீஸ் கூறியதாவது, மின்சார ரயில்களில் படியில் நின்று பயணிப்பவர்களையும், தண்டவாளங்களைக் கடந்து பிளாட்பார்ம்களில் ஏறுபவர்களையும் ரயில்வே நாங்கள் எச்சரிப்பது வழக்கம். லத்தியை சுழற்றியும் ஓங்கி குரல் கொடுத்தும் நாங்கள் அவ்வாறு எச்சரிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த சின்னப்பொண்ணு அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை குரைத்து விரட்டத் தொடங்கியது. தானாகவே அது பயிற்சி பெற்றுக் கொண்டது. எதுவும் கற்றுக் கொடுக்காமலேயே பணிக்காமலேயே வேலை செய்யும் சின்னப்பொண்ணு அதிகாரப்பூர்வமாக ரயில்வே காவல் படையில் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால், தினமும் கடமை தவறாமல் பணியாற்றுகிறது” என்றார்.
காவல் பணியில் உள்ள நாய்களுக்கு சம்பளம் உண்டு, பராமரிப்பு உண்டு. ஆனால் பிரதிபலன் பாராமல் நாயாய் உழைக்கிறாள் இந்த சின்னப்பொண்ணு என்றால் அது மிகையாகாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.