சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியரின் 2 வயது குழந்தை திருப்போரூரில் போலீசாரால் மீட்கப்பட்டான்.
ஒடிசாவை சேர்ந்த ராம்சிங் – நீலாவதி தம்பதியர் தங்களுடைய 2 வயது குழந்தை சோம்நாத்துடன் ரயில் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் அவர்கள் ரயில் நிலையத்தில் உள்ள 6வது நடைமேடையிலேயே தூங்கிவிட்டனர். அப்போது, அங்கே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சோம்நாத் திடீரென மாயமானான்.
குழந்தை காணாமல் போனதை அறிந்து அதிச்சியடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்தனர். அதில், கையில் சிவப்பு நிற பையுடன் மர்மநபர் ஒருவர் குழந்தையை தூக்கிக்கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. அந்த நபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் அந்த குழந்தை திருப்போரூரில் மீட்கப்பட்டான். திருப்போரூரில் தனியாக இருந்த குழந்தை சோம்நாத் யார் என்று தெரியாததால் அப்பகுதி மக்கள் குழந்தையை செங்கல்பட்டில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை காணாமல் போன செய்தியை அறிந்து காப்பக நிர்வாகத்தினர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், செங்கல்பட்டுக்கு விரைந்த ரயில்வே போலீசார் காப்பகத்திலிருந்த குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, குழந்தையை கடத்திய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒடிசாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி. முருகன், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், குழந்தையை கடத்திச் சென்ற நபரை சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் அடையாளம் கண்டோம். குழந்தையை கண்டுபிடிக்கவும் கடத்தலில் ஈடுபட்ட நபரை பிடிப்பதற்காகவும் தனிப்படை அமைத்து தேடுதல் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, குழந்தையை திருப்போரூரில் மீட்டோம். அங்கே குழந்தை தனியாக இருந்துள்ளான். குழந்தையை கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை கடத்தி தனியாக விட என்ன காரணம் என்று விசாரித்து வருகிறோம். இதில் குழந்தையை பறிகொடுத்தவரும், கடத்தியவரும் ஒடிசா மாநிலத்தை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, இனி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவிக்கப்படும். அதை வைத்து குழந்தைகளை அடையாளம் காண உதவியாக இருக்கும்” என்று இவ்வாறு கூறினார்.