நடிகர் அஜித் ஆலோசனைகள் வழங்கி, தலைமை தாங்கிய 'தக்ஷா’ குழுவிற்கு தமிழக அரசு அப்துல்கலாம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
அப்துல்கலாம் விருது :
சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் சோதனை பைலட்டாகவும் ஆலோசகராகவும் அஜித் சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.
இதற்காக டீம் தக்ஷா எனும் பெயரில் புதிய மாணவர் குழுவை உருவாக்கினார்கள் அதில் அஜித் முக்கிய ஆலோசகராக செயல்பட்டார். அஜித் தலைமையில் இயங்கிய இந்த மாணவர்கள் குழு ட்ரோன் ஹெலிகாப்டரை ஒன்றை உருவாக்கினார்கள். இந்த ட்ரோன் தான் தற்போது இந்தியா முழுவதும் உள்ள 111 பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் பல சாதனைகளை படைத்தது.
சமீபத்தில் நடந்த போட்டியில் தக்ஷா ட்ரோன் 6 மணி நேரம் 7 நிமிடம் வானத்தில் பறந்து உலகத்திலேயே அதிக நேரம் பறக்கக்கூடிய ட்ரோன் என புதிய சாதனையை செய்தது. அஜித்தின் வழிக்காட்டுதலில் கல்லூரி மாணவர்கள் செய்த இந்த சாதனை பலரையும் வியக்க வைத்தது.
தக்ஷா குழு
இந்த சாதனைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்து கவுரவித்துள்ளது தமிழக அரசு. கடந்த 15 ஆம் தேதி 72 ஆவது சுதந்திரத் தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழக அரசு சார்பில் சென்னை கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக் கொடி ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் <பின்பு பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் தான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்ஷா குழுவுக்கு நடப்பாண்டுக்கான அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் ஹெலிகாப்டர் ஓட்டுவது, ஆள் இல்லா குட்டி விமானங்களை இயக்குவது ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அந்த விதத்தில் அவர் ஆலோசனை வழங்கிய தக்ஷா குழு , தொடர்ந்து இப்படி சாதனைகள் புரிந்து வருவது அஜித்தின் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. சினிமா துறையில் கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் அஜித் இந்த பயிற்சிக்காக வாங்கிய தொகை வெறும் 1000 ரூபாய் மட்டுமே. அதனையும் ஏழை மக்களின் கல்விக்கு உபயோகப்டுத்துமாறு கல்லூரி நிர்வாகத்திடம் அஜித் கூறியுள்ளார்.