பாகிஸ்தான் பிடித்து வைத்திருப்பதாக அறிவித்திருக்கும் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், திருவண்ணாமலை மாவட்டம் திருப்பனமூரைச் சேர்ந்தவர். அபிநந்தனின் பெற்றோர் சென்னை சேலையூரை அடுத்த மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.
அபிநந்தனின் தந்தை ஏர்மார்ஷல் எஸ்.வர்தமான் கிழக்கு பிராந்திய விமானப்படை ஏர் ஆபிஸர் கமாண்டிங் சீப் ஆக ஷில்லாங்கில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிராஜ் 2000 போர் விமானத்தை மேம்படுத்துதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது தாயார் மல்லிகா. இருவரும் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
அபிநந்தனின் தாத்தா சிம்மகுட்டி இந்திய விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராக இருந்துள்ளார். அவரது தந்தை வர்தமான் பிரான்ஸ் நாட்டில் விமானியாக வேலைபார்த்துவிட்டு, பின்னர் இந்திய ராணுவத்தில் விமானியாக பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து அபிநந்தனும் இந்திய விமானப்படையில் விமானியாக சேர்ந்தார். இவர்கள் குடும்பத்தினர் தொடர்ந்து 3 தலைமுறைகளாக விமானப் படையில் இருந்து நாட்டுக்குச் சேவை செய்து வருகின்றனர்.
அபிநந்தனின் தந்தை வர்தமான் காற்று வெளியிடை படத்துக்கு ஆலோசகராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகன் குறித்து வர்தமான் தைரியமான மனநிலையிலேயே இருக்கிறார்.
இதற்கிடையே சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள அபிநந்தன் இல்லத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் சென்று ஆறுதல் கூறினர்.
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. ராமச்சந்திரன், போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் அபிநந்தன் வீட்டுக்கு சென்றனர். அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அபிநந்தனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் இன்று அபிநந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.
பிரேமலதா கூறுகையில், ‘தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சார்பில் அபிநந்தனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்கள் 1942-ம் ஆண்டு முதல் 3 தலைமுறையாக விமானப்படை பிரிவில் நாட்டுக்காக சேவை செய்து வருவதை அறிந்து பெருமைப்படுகிறேன்.
தங்கள் மகன் பாகிஸ்தானில் பிடிபட்டுள்ள நேரத்தில் இந்திய மக்கள் அனைவரும் மொழி, மதம் கடந்து அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப பிரார்த்திப்பதை அறிந்து நெகிழ்ச்சி அடைவதாக கூறினார்கள். இந்தியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.
அதேநேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுத்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் தே.மு.தி.க. சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப தே.மு.தி.க. சார்பில் பிரார்த்திக்கிறோம்.’ இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று அபிநந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா சென்றிருந்தார்.
டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது: ‘தி.மு.க. சார்பிலும் மு.க.ஸ்டாலின் சார்பிலும் அபிநந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன். அபிநந்தன் வீரதீர செயல் மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் ஜெனிவா ஒப்பந்தம் 13-வது பிரிவின்படி துன்புறுத்தாமல் நடத்தப்பட வேண்டும். அவரது குடும்பத்தினர் தைரியமாக உள்ளனர். அவர்கள் தான் நமக்கு தைரியம் சொல்கிறார்கள். அபினந்தன் விரைவில் நாடு திரும்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.