மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் ரூ. 61 கோடியே 78 லட்சம் மதிப்பில் ஏறு தழுவுதல் அரங்கம் கட்டப்பட்டு உள்ளது. இந்த அரங்கத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் எனப் பெயரிடப்பட்டது.
இதனைத் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஜனவரி 24, 2024 அன்று திறந்து வைத்தார். இந்த அரங்கத்தில் நடந்த முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் அபி சித்தர் முதலிடம் பிடித்தார்.
அலங்காநல்லூர் போட்டியில் இவர் இரண்டாம் இடம் வந்திருந்தார். அப்போது போட்டியில் சில குளறுபடிகள் நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அமைச்சரும் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், போட்டியில் வென்றது குறித்து பேசிய அபி சித்தர், "இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றே நான் எனது பெயரை பதிவு செய்தேன்.
எனக்கு பலரும் பக்க பலமாக இருந்தார்கள். நான் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டியில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் எனது பெயரையே பதிவு செய்தேன்" என்றார்.
போட்டியில் வென்ற அபிசித்தருக்கு, ₹.1 லட்சம் ரொக்கம் மற்றும் மஹிந்திரா கார் பரிசாக வழங்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“