பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு; குழு அமைத்து நடவடிக்கை – முதல்வர் பழனிசாமி

பிரதமரின் கிசான் திட்டத்தில் சில முறைகேடு நடைபெற்றுள்ளது. அந்த முறைகேடுகளை கண்டுபிடித்து மீண்டும் அந்த பணத்தை திரும்பப் பெற குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

By: Updated: September 7, 2020, 10:56:08 PM

பிரதமரின் கிசான் திட்டத்தில் சில முறைகேடு நடைபெற்றுள்ளது. அந்த முறைகேடுகளை கண்டுபிடித்து மீண்டும் அந்த பணத்தை திரும்பப் பெற குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, பின்னர், அரசின் திட்டங்கள் குறித்து பேசினார். முதல்வர் பழனிசாமி பேசியதாவது, “திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் சுய உதவி குழு நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடுமையான முயற்சி எடுத்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் ஒரு வைரஸ் தொற்று சற்று அதிகமகா இருந்தது.

இன்று மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை உள்ளாட்சித்துறை ஒன்றாக இணைந்து எடுத்த நடவடிக்கையின் காரணமாக நோய் பரவல் இன்று படிப்படியாக குறைந்து இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் சென்னையை ஒட்டிய மாவட்டமாக இருப்பதால் அதிகமான போக்குவரத்து உள்ள மாவட்டமாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் குறு சிறு பெரு நிறுவனங்கள் அதிகமாக இருக்கிறது நிறுவனங்களில் பணி புரிகின்ற அதிகாரிகளும் அதிகமாக இருக்கிறார்கள் இவர்களில் பல பேர் சென்னையில் வசிக்கிறார்கள் திருவள்ளூர் மாவட்டத்தை ஒட்டி வசிப்பவர்களும் பணி காரணமாக இந்த மாவட்டத்திற்கு சென்று வரும் சூழ்நிலை இருக்கிறது.

இன்றைக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து நோய் பரவலை தடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரத்துறை உள்ளாட்சித்துறை நோய் தடுப்பு பணியில் ஏற்பட்டதன் காரணமாக நோய் பரவல் திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

அதோடு திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் போதிய அளவில் இருப்பில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை நேற்றைய தினம் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 311 பேர். தோற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு 24,711 பேர். கொரோனா பாதிப்பால் கிசிச்சை பலனின்றி இறந்தவர்கள் 436 பேர். கொரோனா தொற்றில் இருந்து 24 ஆயிரத்து இருநூற்று 75 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எடுத்த பல நடவடிக்கைகளின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைக்கப்பட்டிருக்கிறது.

அரசு அறிவித்த திட்டங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடிமராமத்து பணி சிறப்பாக செயல்பட்டு வருவது காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பல ஏரிகள் இன்றைக்கு நிரம்பி வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் 50 சதவீத ஏரிகள் நிரம்பியிருக்கின்றன. தமிழக அரசு குடிமராமத்து பணியை சிறப்பாக செயல்படுத்தி அதன் மூலம் ஏரிகளின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டு அதிகமான நீர் சேமித்து வைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர் முதல் எர்ணாவூர் குப்பம் வரை முதல் கட்டமாக 9  அடி அளவு கொண்ட தூண்டில் வளைவு 38 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு திருவள்ளூர் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டும் பணிக்காக 386 கோடி ஒதுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இன்றைக்கு அறிவிக்கப்பட்ட உடனேயே பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகஅரசு மாநிலத்தில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை உருவாக்கி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்படும் புதிய மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் தன்னிச்சையாக தொழில் தொடங்க உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 15வது இடத்தில் இருந்தது 14 ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. முதல் 10 இடங்களுக்குள் தமிழகத்தை கொண்டு வருவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஒற்றைச்சாளர முறை ஆரம்பித்திருக்கிறது. 2019 நான் முதலமைச்சரான பிறகு, தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி ஒரு லட்சத்து 5,000 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்து இருக்கிறோம். 304 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க அனுமதி கொடுத்தால் உடனே ஆரம்பித்துவிடமாட்டார்கள். அதற்கு நிலம்,தேவையான நிதி ஆதாரம் வேண்டும். இவ்வளவு ஏற்படுத்திய பிறகு தான் தொழில் தொடங்குவார்கள். இன்றைக்கு ஒரு தொழில் தொடங்குவதற்கு அனுமதி அளிப்பதற்கு ஒற்றைச்சாளர முறை தொடங்கப்பட்டிருக்கிறது. அனுமதி பெறும் வழிகள் எளிமையாக்கப்பட்டிருக்கிறது. அதனால், நிறைய பேர் தொடங்குவார்கள் அதற்கு பிறகு தமிழகம் இரண்டாவது மூன்றாவது இடத்துக்கு கொண்டு வந்து விடுவோம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரி தொடங்குவதற்கு வருகின்ற ஆண்டில் நிதி நிலையை பொறுத்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.

விவசாய கடன் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “விவசாய கடனில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. பிரதமரின் கிசான் திட்டத்தில்தான் முறைகேடு நடைபெற்றுள்ளது. மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்தது. அதை சில பேர் தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். இந்த திட்டத்தில் எங்கெல்லாம் தவறு நடந்திருக்கிறதோ, அங்கெல்லாம் தமிழக அரசு குழு அமைத்து, தவறுகளைக் கண்டுபிடித்து அந்த குழு மூலமாக பணத்தை ரெக்கவரி செய்து கொண்டிருக்கிறார்கள். நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Abuse in the prime ministers kisan scheme action to set up a committee cm edappadi k palanisamy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X