கல்லூரி உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு : அதிகாரிகளுக்கான தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்தது!

கல்வி முன்னாள் இணை இயக்குநர் உள்ளிட்ட 5 பேரின் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஆய்வுக்கூட உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் 56 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்த வழக்கில் கல்லூரி கல்வி முன்னாள் இணை இயக்குநர் உள்ளிட்ட 5 பேரின் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள ஆய்வு கூடங்களுக்கு பொருட்கள் கொள்முதல் செய்ய கடந்த 1995 ஆம் ஆண்டு கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டார்.

அதன்படி தரமற்ற பொருட்கள் கொள்முதல் செய்ததன் மூலம் அரசுக்கு 56 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கல்லூரி கல்வி இணை இயக்குநர் காசிநாதன், விழுப்புரம் கூட்டுறவு சங்க தனி அதிகாரி பெருமாள், திண்டுக்கல் கூட்டுறவு சங்க தலைவர் திருப்பதிராஜ், திருவண்ணாமலை அண்ணாமலையார் கூட்டுறவு சங்க தலைவர் கார்மேகம், தனிநபர் கோவிந்தராஜன் ஆகியோர் மீது காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை லஞ்ச ஒழிப்பு துறை சிறப்பு நீதிமன்றம், 2007ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி காசிநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், மற்ற 4 பேருக்கும் தலா ஒராண்டு சிறை தண்டனையும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2008 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தனர். இதனிடையே 2009 ஆம் ஆண்டு காசிநாதன், 2010 ஆம் ஆண்டு பெருமாள் ஆகியோர் மரணமடைந்தனர்.

இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் காவல்துறை நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்வதாகவும். இறந்த இருவரை தவிர 3 பேரும் சம்மந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் ஜூலை 4 ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close