விஏஒ நியமனத்தில் முறைகேடு : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திரனின் தலையீட்டின்படி அவருக்கு வேண்டப்பட்டவர்கள் கிராம உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என மனுவில் கூறியுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில், 24 கிராம நிர்வாக உதவியாளர் தேர்வில் லஞ்சம் கேட்டதாகவும், தேர்வு நடைமுறைகளில் முறைகேடு நடந்துள்ளதால் தேர்வு நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரிய மனுவிற்கு நான்கு வாரத்தில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரியலூர் மாவட்டத்தில், 24 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த பணிக்கு விண்ணப்பித்த உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள பருக்கல் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர், தேர்வு நடவடிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த பணிக்கு 5 லட்சம் வரை லஞ்சம் அளிக்கபடுகிற நபர்களுக்கு தான் பணி வழங்குவதாகவும். தேர்வு நடவடிக்கைகளில் முறைப்பாடுகள் நடைபெறுவதால் தேர்வை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேர்முகத் தேர்வு முறையாக நடைபெறவில்லை எனவும் அரசு கொறடாவும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திரனின் தலையீட்டின்படி அவருக்கு வேண்டப்பட்டவர்கள் கிராம உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும், 4 முதல் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக வருவாய் துறை செயலருக்கும், அரியலூர் மாவட்ட ஆட்சியர், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம் தாலுகா தாசில்தாரர்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டு விசாரணை நான்கு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

×Close
×Close