ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதி என்றும் டிசம்பம் மாதம் அது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினியின் அரசியல் வாழ்க்கையில் இப்போது பலமாக துணை நிற்பவர் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 'நான் அரசியலில் இறங்குவது உறுதி' என்று அறிவித்த பிறகு அவர் அதிகாரப்பூர்வமாக ரசிகர்களை அழைத்து மாநாடோ, பொதுக்கூட்டமோ இதுவரை நடத்தவில்லை.
ஆனால், கடந்த மார்ச் மாதம் சென்னை பூந்தமல்லி வேலப்பன் சாவடியில் அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். அந்த விழாவில், நூற்றுக்கணக்கான ரஜினி ரசிகர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
அரசியல் விமர்சகர்களோ, 'துளி செலவில்லாமல், ரஜினி தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்தி முடித்துவிட்டார்' என்றனர். அந்தளவிற்கு ரஜினியுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஏ.சி.சண்முகம், ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சி அறிவிப்பை டிசம்பம் மாதம் வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "ரஜினி கட்சி தொடங்குவது உறுதி. டிசம்பர் மாதம் அது பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார். ரஜினி தொடங்கும் புதிய கட்சியுடன் புதிய நீதி கட்சியும் கரம் கோர்த்து செயல்படும்" என்று கூறியுள்ளார்.