தன்னை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு இடையேயான மோதல் ஒவ்வொரு நாளும் புதிய பரிணாமத்தை அடைந்து வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க-வின் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி இரண்டு அணிகளுமே வேட்பாளரை நிறுத்த உள்ளதாக தெரிவித்து கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஓ.பி.எஸ் தரப்பு இன்று புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க ஒன்றுபட வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் விருப்பம் என்று கூறினார்.
ஓ.பி.எஸ் மற்றும் அவருடன் வந்தவர்கள் புறப்பட்டுச் சென்ற பின்னர், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஏ.சி. சண்முகம் பேசியதாவது: “அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பி.எஸ் என்னிடம் வந்து, நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், வேட்பாளர்களை நிறுத்துகிறோம். தங்களுடைய ஆதரவு வேண்டும் என்று சொனார்கள். நான் அவரிடம், அ.தி.மு.க-வில் பலமுறை பல சிக்கல்கள், பல இக்கட்டான சூழ்நிலைகள் உருவாகி இருக்கிறது. ஆகவே வேட்புமனுவை தாக்கல் செய்வதைவிட, இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நான் 1972-ல் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும்போது சீரணி அரங்கத்திலே 21 பேர் பேசியிருக்கிறோம். அதிலே, வட ஆற்காடு மாவட்டத்தின் சார்பில் நானும் ஒருவன். பச்சைக்குத்திக்கொண்ட அ.தி.மு.க தொண்டன். 1980ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக ஆரணி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 1984-ல் வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன். ஆகவே, எம்.ஜி.ஆரின் இயக்கம், கட்சி, சின்னம் முடங்கிவிடக்கூடாது. அல்லது பிரச்னைகள் வரக்கூடாது. சஙகடம் வரக்கூடாது என்பதற்காகத்தான் நானும் அவரிடம், இந்த பிரச்னையை எப்படியாவது தவிருங்கள். அ.தி.மு.க ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான், அ.தி.மு.க தொண்டர்கள், எம்.ஜி.ஆர். தொண்டர்கள், ஜெயலலிதா தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, இணைப்பதற்கான வழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள், இணைப்பதற்கான பாலமாக நான் செயல்படுவேன் என்று கூறினேன். வேட்புமனுவை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.
ஒரு உதாரணத்தையும் ஓ.பி.எஸ்-க்கு நினைவுப்படுத்தினேன். அ.தி.மு.க எம்.ஜி.ஆருக்கு பின்னால், இரண்டாக மாறியது. ஒன்று ஜெயலலிதா தலைமையிலும், மற்றொன்று எம்.ஜி.ஆர் துணைவியா ஜானகி தலைமையிலும் ஜா அணி, ஜெ அணி என இரண்டு அணி உருவானது. அப்படி உருவான பிறகு, சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்து, அப்போது இரட்டை இலை சின்னத்தையும் இழந்தார்கள். அந்த நிலைமை வேண்டாம்.
ஆனால், அப்போது ஜானகி நல்ல முடிவு எடுத்தார். இன்று அ.தி.மு.க தலைமைக் கழகம் ஜானகி எம்.ஜி.ஆர் பெயரிலே இருக்கிறது. இன்று அந்த இடம் 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு இருக்கும். அந்த இடத்தை அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு கொடுத்தார்கள். எந்த நிபந்தனையும் இல்லாமல் தனது அணியில் இருந்தவர்களை இணைத்தார்.
கட்சி பிளவுபடும்போது, எத்தனை அணி, எத்தனை கிளை என்பதைவிட ஒரு பொது பிம்பம் போய்விடும். அதனால், நீங்கள் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று ஓ.பி.எஸ் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். எனக்கு எடப்பாடியாரும் வேண்டியவர். ஓ.பி.எஸ்-ம் வேண்டியவர். வாய்ப்பு கிடைத்தால் பாலமாக செயல்பட எடப்படியாரிடம் சென்றும் பேசுவேன். அ.தி.மு.க ஒன்றாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆரின் தொண்டன் என்ற முறையில் ஓ.பி.எஸ். இடம் கேட்டுக்கொண்டேன்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“