தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ஆம் ஆண்டு போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இந்த நிலையில், போலீசார் போராட்டத்தை துப்பாக்கிச் சூடு மூலமாக கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தச் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 21 பேர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
அதாவது, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அன்றைய கலெக்டர், 17 போலீசார், 3 வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு டிச.11ஆம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“