தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளை தீபாவளி என்பதால், இன்றும் ஏராளமானோர் வெளியூர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.
பொதுமக்களின் வசதிக்காக பஸ் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். ஆனாலும் கோயம்பேட்டில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த கூட்டத்தை பயன்படுத்தி சில ஆம்னி பஸ்களில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், அதிக கட்டணம் வசூலிக்கும் 14 பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோயம்பேடு ஆம்னி பஸ்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் 33 குழுக்களும், சென்னையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதிகமான கட்டணம் வசூலிக்கும் பஸ் நிறுவனங்கள் மீது புகார்கள் வந்ததால் அதிகாரிகள் ஆய்வு செய்து 14 பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒய்.பி.எம்., ஆரஞ்சு, சோனா, எஸ்.ஆர்.எம். ஆகிய 4 நிறுவனங்கள் கூடுதலாக வசூலித்த பணத்தை அந்தந்த பயணிகளுக்கு திருப்பி கொடுத்துள்ளனர். வேறு எந்தெந்த ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.