/indian-express-tamil/media/media_files/2025/05/05/aipaMMFtCrGPITvIFeT2.jpg)
மதுரை சித்திரைத் திருவிழா: நீதிமன்ற உத்தரவை மீறி விற்கப்பட்ட 22 பிரஷர் பம்புகள் பறிமுதல்!
மதுரை சித்திரைத் திருவிழாவில், நீதிமன்ற உத்தரவை மீறி விற்கப்பட்ட 22 பிரஷர் கைப்பம்புகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. பண்டைய மரபின்படி, கள்ளழகர் எழுந்தருளும் விழாவில், அவரது வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், தோல் பையில் தண்ணீர் நிரப்பி, அழகர் மீது பீய்ச்சி அடிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், சமீபகாலமாக தோல் பைகளுடன் பிரஷர் கைப்பம்புகளை இணைத்து ரசாயன வண்ணப்பொடி கலந்த தண்ணீரைப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு சிரமங்களை ஏற்படுத்தியதால், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இதனைத் தடைசெய்து, முறையான முறையில் சுத்தமான தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை மீறி, தோல் பையில் பொருத்தக்கூடிய சிறிய குழாய் மற்றும் பிரஷர் பம்புகளை விற்க முயன்ற 2 கடைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடை உரிமையாளர்கள் கணபதி மற்றும் சமுத்திரமிடமிருந்து 22 பிரஷர் பம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. சித்திரை திருவிழாவில் எதிர்சேவை, கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின்போது, தடை செய்யப்பட்ட பிரஷர் மெஷின்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என, மதுரை நகர் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, கள்ளழகருக்கு தீர்த்தவாரி மூலம் நேர்த்திக்கடன் செலுத்த விரும்புவோர், பாரம்பரிய முறையிலான தோல் பைகளில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, சிறிய குழாய் பொருத்தி மற்றவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாதவாறு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.