/indian-express-tamil/media/media_files/2025/01/20/NNwyOdpFCgyPqmgB0Mex.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சட்டவிரோத கல்குவாரி, கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி சந்கேத்திற்குரிய வகையில் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கில் லாரி உரிமையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த கொலையை கண்டித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள X பதிவில், " புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான திரு. ஜெகபர் அலி அவர்கள், கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், மோடி கபடி லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற, முக்கிய பங்காற்றியவர் திரு. ஜெகபர் அலி அவர்கள். இயற்கை வளப்பாதுகாப்பு, கனிமவளங்களின் கொள்ளையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அக்கறையுடன் செயல்பட்டவர்.
கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் பலி கொடுத்திருக்கிறார்கள்.
இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாடுபட்டவர் உயிரை எடுக்குமளவுக்கு, தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனக் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் மணல் கொள்ளைக்குச் செல்லலாம் என்று கூறியே ஆட்சிக்கு வந்த திமுக கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன?
கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான திரு. ஜெகபர் அலி அவர்கள், கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
— K.Annamalai (@annamalai_k) January 19, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில், மோடி… pic.twitter.com/0vbJKZFSPz
மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு.ஜெபகர் அலி அவர்கள் , சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு.ஜெபகர் அலி அவர்கள் ,
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) January 20, 2025
சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற…
தொடர்ந்து வேல்முருகன் வெளியிட்டுள்ள பதிவில், "புதுக்கோட்டையில் கனிம வளக்கொள்கைக்கு எதிராக போராடியவர் மர்ம மரணம் : சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல், மண், மலை உள்ளிட்ட கனிமவளங்கள் சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. பெயருக்கு ஒரு அரசு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒதுக்கப்பட்ட அளவைவிட பல ஆயிரம் மடங்கு கனிமங்கள் வெட்டி அள்ளப்படுவதைப் பல முறை ஆய்வுகளில் கண்டறியப்பட்டாலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, விதியை மீறிய குவாரிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையைக் கூட கட்டாமல் கல்குவாரி அதிபர்கள் காலம் கடத்துவதை அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இச்சூழலில், புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த தோழர் ஜகபர் அலி. சமூக ஆர்வலரான அவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வருகிறார். ஆனால், இவ்விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த 10.01.2025 அன்று, திருமயம் தாலுகாவில் கனிம வளக்கொள்கை நடப்பதாக, புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம், தோழர் ஜகபர் அலி மனு கொடுத்திருக்கிறார்.
அந்த மனுவில், சில குவாரிகளின் பெயர்களுடன், பல முக்கிய ஆதாரங்களையும் இணைத்து, கனிம வளக்கொள்ளை நடந்ததை அம்பலப்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில், 17.01.2025 அன்று, தோழர் ஜகபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, அவ்வழியாக வந்த கல்குவாரிக்கு சொந்தமான லாரி ஒன்று, ஜகபர் அலியின் வாகனத்தின் மீது மோதியிருக்கிறது. இதில், தோழர் ஜகபர் அலி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
தோழர் ஜகபர் அலியின் மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அதாவது, கல்குவாரி அதிபர்களால் திட்டமிடப்பட்டு, இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுகிறது.
புதுக்கோட்டையில் கனிம வளக்கொள்கைக்கு எதிராக போராடியவர் மர்ம மரணம் : சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்!
— Velmurugan.T (@VelmuruganTVK) January 19, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல், மண், மலை உள்ளிட்ட கனிமவளங்கள் சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. பெயருக்கு ஒரு அரசு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒதுக்கப்பட்ட அளவைவிட பல… pic.twitter.com/Mlp0qBBswq
ஏனென்றால், தமிழ்நாட்டில் கனிம வளக்கொள்ளையை எதிர்த்த நேர்மையான அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும் சில அரசியல் கட்சியினரின் முழு ஆதரவோடு கொள்ளை நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, தோழர் ஜகபர் அலியும் திட்டமிட்டு கல்குவாரி அதிபர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இதில் அரசு அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சந்தேகிக்கிறது.
எனவே, தோழர் ஜகபர் அலி மரண விவகாரத்தை விசாரிக்க, இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் மணல், கற்கள் உள்ளிட்ட கனிமவள கொள்ளையை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தோழர் ஜகபர் அலியின் குடும்பத்தினருக்கு ரூ.25 இலட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தோழர் ஜகபர் அலியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, உறவினர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.