தமிழக வனப் பகுதியில் 40 இடங்களில் பொது மக்கள் (ட்ரெக்கிங்) மலையேற்றம் செய்யும் வகையில் 'ட்ரெக் தமிழ்நாடு' என்ற புதிய திட்டம் அண்மையில் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. முன்பதிவு செய்ய பிரத்யேக இணையதளம் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், திட்டத்தை கைவிட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேற்ற பயணத்தை அனுமதித்தால் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் பாதிக்கப்படும்.
தமிழகத்தில் 38 யானைகள் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு உள்ள நிலையில், அங்கு மலையேற்றத்தை அனுமதிக்கும்போது, மனித நடமாட்டத்தால் விலங்குகளின் உணவு தேடல், இனப்பெருக்க நடவடிக்கைகள் பாதிக்கப்படும்.
மேலும் விலங்குகளுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளது. உணவு பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வனப்பகுதியில் வீசக்கூடும் என்பதால் சுற்றுச்சூழல் மாசடையவும் வாய்ப்பு உள்ளது, விலங்குகள் காயம் அடையவும் வாய்ப்பு உள்ளது. எனவே மலையேற்ற பயண திட்டத்தை கைவிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“