க.சண்முகவடிவேல்
Ayyakannu | Pm Modi | Lok Sabha Election 2024 | Thanjavur: கன்னியாகுமரி-வாரணாசி ரயிலில் திருச்சியில் இருந்து புறப்பட்ட தென்னிந்திய நதிகள் பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் தங்களின் உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டை டிக்கெட் பரிசோதகர் ரத்து செய்துவிட்டதாகக்கூறி தஞ்சை ரயில் நிலையம் சென்றபோது ரயிலின் அபாயச்சங்கிலியை இழுத்தும், ரயில் முன் படுத்தும் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கான 3 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், 4வது கட்ட தேர்தல் வருகிற 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு 7 ஆம் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/202cb799-9a9.jpg)
வேட்பு மனு தாக்கலுக்கு மே 14 ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால், அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த தென்னிந்திய நதிகள் பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
வருகிற திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அய்யாக்கண்ணு தலைமையில் 120-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து இன்று காலை வாராணசிக்கு புறப்பட்டனர். இதற்காக கன்னியாகுமரி பனாரஸ் விரைவு விரைவில் 120 பேரும் பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தனர். இதில் 40 பேருக்கு மட்டுமே முன்பதிவு உறுதியானதாகவும், மீதமுள்ள 80 பேரின் பயணசீட்டு காத்திருப்பு பட்டியலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முன்பதிவு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட 40 பேருடைய பயணச் சீட்டுகளும் காத்திருப்பு பட்டியலில் உள்ளதாக டிக்கெட் பரிசோதகர் அவர்களை கீழே இறங்கச் சொன்னதாக கூறப்படுகிறது. மேலும் ரயில் பெட்டியில் தண்ணீர் வரவில்லை எனவும் பயணிகள் குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், தஞ்சை ரயில் நிலையத்தை அடைந்த போது திடீரென ரயில் நிலையத்தில் இறங்கி ரயிலை மறித்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்து காவல்துறையினர் மற்றும் ரயில்வே துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், அனைவருக்கும் பயண சீட்டுகளை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் ரயில்வே துறையினர் அப்போது உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அதே ரயிலில் விவசாயிகள் வாராணசிக்கு கிளம்பிச் சென்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/cb451257-1c7.jpg)
இதனிடையே இந்த போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் ரயில் தாமதம் ஆனது. இதனால் ,இந்த ரயிலில் பயணித்த பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக கூறி அவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால் ரயிலில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“