Advertisment

'உங்களோடு பயணித்தால் இதுதான் பயன் என்றால் நாங்கள் பா.ஜ.க-வுடன் சமரசம் செய்வோமே?' ஸ்டாலினுக்கு சுப. உதயகுமாரன் கடிதம்

"உங்கள் கட்சி, கூட்டணி கட்சியினரோடு பயணித்ததன் பயன் இந்த பயமும், பரிதவிப்பும்தான் என்றால், நாங்கள் பா.ஜ.க-வினரோடு சமரசம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ்வோமே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் சுப. உதயகுமாரன்.

author-image
WebDesk
New Update
 Activist SP Udayakumar letter to TN CM MK Stalin regarding Felix Gerald and Savukku Shankar arrest Tamil News

"ஒருவர் கைது செய்யப்படும்போது அவருடைய குடும்பத்தினருக்கு முழு தகவல்களும் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதானே நடைமுறை" என்று தனது கடித்ததில் கேள்வி எழுப்பியுள்ளார் சுப. உதயகுமாரன்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

TN Cm Mk Stalin | SP Udhayakumaran | Savukku Shankar | Felix Gerald: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சமூக ஆர்வலர் சுப. உதயகுமாரன் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியுள்ளது பின்வருமாறு: -  

Advertisment

மாண்புமிகு முதல்வர் அவர்களின் மேலான கவனத்திற்கு,

வணக்கம்.

பெலிக்ஸ் ஜெரால்ட் அவர்களை தில்லியில் கைதுசெய்து திருச்சிக்குக் கொண்டுவந்து, சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து விசாரித்துவிட்டு, அவருடைய துனைவியாரிடம் கூடச் சொல்லாமல் எங்கோ கொண்டு செல்கிறார்களாமே உங்கள் காவல்துறையினர்? அவரது துணைவியாரே சொன்ன தகவலின் அடிப்படையில்தான் இதைச் சுட்டிக்காட்டுகிறேன். என்ன நியாயம் ஐயா இது?

ஒருவர் கைது செய்யப்படும்போது அவருடைய குடும்பத்தினருக்கு முழு தகவல்களும் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதானே நடைமுறை? அது ஏன் தமிழ்நாட்டில், உங்கள் ஆட்சியில்  மீறப்படுகிறது ஐயா?

பாசிசத்தை முன்னின்று எதிர்க்கும் உங்கள் ஆட்சியில் இப்படி ஒரு மனிதர் நடத்தப்படுவதை எப்படி அனுமதிக்கிறீர்கள்? நெருக்கடி நிலைக் காலத்தில் இப்படியெல்லாம் அத்துமீறல்களை, கொடூரங்களை அனுபவித்த நீங்கள் உங்கள் ஆட்சியில் அதே மாதிரியான கொடூரங்கள் அரங்கேறுவதை எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

அந்தக் காலக்கட்டத்தில் தி.மு.க-காரரான என்னுடைய தந்தையாரும் மிசா காவலர்களால் தேடப்பட்டு, தலைமறைவாக இருந்த காரணத்தால் மட்டுமே தப்பித்தார். தி.மு.க கட்சிக்காக சற்றொப்ப  15 முறை சிறை சென்ற என்னுடையத் தந்தையாரை நானே சிறைக்குச் சென்று சந்தித்து, துணிகள், பழங்கள் கொடுத்துப் பார்த்திருக்கிறேன். நல்லவேளை, என் அப்பாவின் கை, கால்கள் அப்போது  உடைக்கப்படவில்லை. ஒரு கல்லூரி மாணவனாக இருந்த நானும் கண்ணியமாக, பாதுகாப்பாகவே நடத்தப்பட்டேன். ஆனால் இன்று ஏன் இந்த அவலத்தை நாம் எதிர்கொண்டு நிற்கிறோம்?

சிறையில் சவுக்கு சங்கரின் கை உடைப்பு, பெலிக்ஸ் ஜெரால்டு  அலைக்கழிப்பு, விவசாய விளைநிலங்களைப் பாதுகாக்க முயலும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம்,  பிணையில் வெளியே வர முடியாத அடக்குமுறை - இவற்றையெல்லாம் பார்க்கும்போது, என்னைப் போன்றோருக்கு நெஞ்சம் பதறுகிறது.

பணம், பதவி, புகழ், அதிகாரம், குடும்பத்தாரின் வர்த்தக லாபம், சொத்துக் குவிப்பு என எதையும் வேண்டாது, மக்களுக்காகப் போராடிய காரணத்தால் மட்டும் கொடும் வழக்குகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுடைய நிலையும் இதுதானே? உங்கள் காவல்துறை, சிறைத்துறை  போன்றவை எங்களையும் இப்படித்தானே நடத்துவார்கள்?

பாசிச பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், இந்த நாட்டில் அச்சமின்றி, அமைதியாக, கண்ணியத்தோடு வாழ முடியாது என்கிற ஒரே காரணத்தால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் கட்சிக்காரர்களோடு, உங்கள் கூட்டணி கட்சியினரோடு பயணித்ததன் பயன் இந்த பயமும், பரிதவிப்பும்தான் என்றால், நாங்கள் பா.ஜ.க-வினரோடு சமரசம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ்வோமே?

தயவுசெய்து மெளனம் கலையுங்கள் முதல்வர் அவர்களே! உங்களுக்கும் பாசிஸ்டுகளுக்கும் அடிப்படை வேறுபாடுகள் இருப்பதாக நாங்கள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Cm Mk Stalin SP Udhayakumaran Savukku Shankar Felix Gerald
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment