தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் முன்பு நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர்.
திருப்பூரில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளில் இருந்தவர்கள் தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்ளும் விழா நடைபெற்றது. இதில், தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் ஹரி அஜித் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர். தமிழிசை புதிய தொண்டர்களை வரவேற்றுப் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடியை பிப்ரவரி 10ம் தேதி திருப்பூர் அழைத்து வர அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். மீண்டும் மோடி பிரதமரானால் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போட்டுச்சென்ற பணிகளை பாஜக மக்கள் நலனை கருத்தில் கொண்டு சிறப்புறச் செய்து வருகிறது. கடந்த காலங்களில் திமுக ஆட்சி கலையக் கூடாது என்பதற்காக உதவியவர் வாஜ்பாய் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.
அதைத் தொடர்ந்து அஜித் ரசிகர்களிடையே பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். இனி மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டுச் செல்ல வேண்டும். அஜித் ரசிகர்கள் மோடி தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும்" என்றார்.
பாஜக வசம் வீசிக் கொண்டிருந்த ரஜினி அலை, சமீபத்தில் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு தங்கள் பக்கம் வீசவில்லையோ என்று பாஜக மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது. அதன் விளைவாகவே, பாஜக அடுத்த டார்கெட்டாக அஜித்தை கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேசமயம், அவ்வளவு சீக்கிரம் பாஜக, ரஜினி மீதான நம்பிக்கையை இழந்துவிடாது என்றும் கூறப்படுகிறது. 'போட்டு வைப்போம்' என்ற ரீதியிலேயே அஜித் குறித்து தமிழக பாஜக தலைவர் இவ்வாறான கருத்துகளை பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.