காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கடந்த 10ம் தேதி சென்னை அண்ணா சாலையில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது, சில காவலர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். "வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்" என்று ரஜினி இந்த சம்பவத்தைக் கண்டித்து இருந்தார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், ரஜினியை 'தங்களுடைய திரைப்படம் வெளியாகும் போது மட்டும் பூச்சாண்டி காட்டும், உங்களைப் போன்ற ஒரு நடிகனைத் தமிழ்த் திரை உலகம் இதுவரை சந்தித்ததே இல்லை. தமிழ்நாட்டிலும் சரி.. உலக அளவிலும் சரி.. தமிழன் கொட்டிக் கொடுத்த பணத்தில், சேர்த்துவைத்த செல்வத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது. நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகக்காவியின் தூதுவர் என்று!.' ரஜினிகாந்தை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், போலீசார் தாக்கப்பட்டது குறித்த ரஜினியின் கருத்தை வரவேற்ற நடிகர் ஆனந்த்ராஜ், இன்று ரஜினியை போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆனந்த்ராஜ், "ரஜினியின் இந்த கருத்துடன் எனக்கு உடன்பாடு உள்ளது. இருவரும் நிறைய பேசினோம். நடிகர்கள் சமீபத்தில் நடத்திய மவுன விரதப் போராட்டத்தில் ரஜினி கலந்து கொண்டார். இதில் பங்கேற்றால், பேச முடியாது என்பதை உணர்ந்த ரஜினி, கிளம்பும் முன்னரே தனது அனைத்து கருத்துகளையும் செய்தியாளர்களிடம் தெரிவித்து விட்டார். அந்த மாண்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
ரஜினி குறித்து பாரதிராஜா மிகக் கடுமையாக விமர்சித்து உள்ளார். ரஜினியை சிலர் கார்னர் செய்வதாகவே எனக்கு தெரிகிறது. சில அமைப்புகள் இவருக்கு எதிராக திரும்புகின்றன. இதற்கு முன் ரஜினியை வைத்து பாரதிராஜா இயக்கிய படத்திற்கு 'கொடி பறக்குது' என ஏன் டைட்டில் வைத்திருக்க வேண்டும்?. இன்று கர்நாடக தூதுவர் என்று சொல்பவர், அன்று 'உனக்கு இந்த டைட்டில் சரி வராதுப்பா-னு சொல்லி 'பரதேசி' என்று டைட்டில் வைத்திருக்க வேண்டியது தானே!?. எதுக்கு 'ரஜினிகாந்த் கொடி பறக்குது-னு டைட்டில் வைக்கணும்?'. இந்தக் கேள்வியை பாரதிராஜாவிடம் நீங்கள் கேளுங்கள்.
நான் இப்போதும் அண்ணா திமுகவில் தான் இருக்கிறேன். ஆனால், தலைவர்களுடன் இல்லை... தொண்டர்களுடன் இருக்கிறேன். ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமையப் போவதில்லை என்பதே எனது கருத்து" என்றார்.
.