தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தேர்தல் பிரச்சார மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் இணைந்து புல்வெளியில் பேசிக்கொண்டே நடந்து செல்லும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், ஆதவ் அர்ஜூனா தமிழக அரசியல் கூட்டணி தொடர்பாகப் பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவருடன் வரும் புஸ்ஸி ஆனந்த், அதற்கு நேரடியாகப் பதில் எதுவும் தெரிவிக்காமல், 'ம்... ம்...' என்று தலையசைத்தபடியே வருகிறார்.
இந்த வைரல் வீடியோவில், ஆதவ் அர்ஜூனா, "அண்ணாமலையாவது 10 பேரை வைத்துக்கொண்டு, தேர்தலில் நின்று 18, 20 சதவீதம் வாக்கு வங்கியை வைத்திருக்கிறார். இங்கே எடப்பாடியை நம்பி கூட்டணிக்கு யாரும் வரும் மாதிரி தெரியவில்லை.
பாரதிய ஜனதா கட்சியே அ.தி.மு.க.வை கூட்டணியில் இருந்து கழற்றிவிடும்" என்று பேசியுள்ளார். இதற்கு புஸ்ஸி ஆனந்த் எந்தப் பதிலும் கூறாமல் சிரித்துக்கொண்டே செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ முழுமையாக இல்லாமல், எடிட் செய்யப்பட்டு, இடை இடையே சில பதிவுகளாகப் பரவி வருகிறது. பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க.வை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் தாடி பாலாஜி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, "நேற்று (அதாவது ஒரு நாள் முன்) ஒரு வீடியோவைப் பார்த்தேன், அது எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. என்னவென்றால், நமது மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமியை, தவெகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா ஒருமையில் பேசியுள்ளார்.
இதனைப் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த்கூட, 'இப்படிப் பேசக்கூடாது' என்று ஒரு வார்த்தைகூட கூறவில்லை. கட்சியில் நடக்கும் இத்தகைய பிரச்சினைகளை தவெக தலைவர் விஜய் நேரடியாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று பாலாஜி கூறியிருந்தார்.