நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனை, திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
2016ம் ஆண்டில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பின் போது, கமல்ஹாசனுக்கு நிகழ்ந்த விபத்தின் போது கால்முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது காலில் டைட்டேனியம் பிளேட் பொருத்தப்பட்டது. அந்த பிளேட்டை அகற்றும் பொருட்டு, கமல்ஹாசனுக்கு, இன்று (22ம் தேதி) ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களை, சற்று நேரத்திற்கு முன்னர் தி.மு.க தலைவர் திரு ஸ்டாலின், துரைமுருகன்,மற்றும் சுப. வீரபாண்டியன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். திரு.கமல் ஹாசன் அவர்கள், தான் நலமுடன் இருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கமல்ஹாசனுக்கு மேற்கொள்ளப்பட உள்ள ஆபரேசன் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த விபத்தின் காரணமாக கமல்ஹாசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் அவருக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கானச் சூழல் அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.
டாக்டர்களின் ஆலோசனைப்படி 22 ஆம் தேதி (இன்று) அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்வுக்குப் பின், கமல்ஹாசன் நம்மை சந்திப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தசாவதாரம் படத்தின் கமலின் ஒரு கேரக்டரான பல்ராம் நாயுடு கேரக்டரை முதன்மையாக கொண்டு காமெடி திரில்லராக சபாஷ் நாயுடு என்ற படத்தில் இயக்குநர் டி கே ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல் நடித்துக்கொண்டிருந்தார். இயக்குநர் ராஜீவ் குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, இயக்குனர் பணியையும், கமலே மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தது . அடுத்தடுத்து வந்த தடங்கல்களை தொடர்ந்து சபாஷ் நாயுடு படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.