Actor Dhanush latest Tamil News: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கு வரியாக அவர் ரூ. 60.66 லட்சம் செலுத்த வேண்டும் என வணிகவரித் துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் தனுஷ்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 26 அன்று தனுஷின் காரை பதிவு செய்வதற்கு இடைக்கால உத்தரவு ஒன்றை நீதிபதி என்.கிருபாகரன் வழங்கினார். அதில் 'வரித் தொகையில் 50 சதவீதத்தை ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு (வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு) 2 வாரங்களில் செலுத்த வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.
பின்னர், கால வரம்பு நீட்டிக்கப்பட்டு நவம்பர் 18, 2015 அன்று தனுஷ் ரூ. 3.33 லட்சத்தை வரியாக செலுத்தினார். இது ஏப்ரல் 27, 2016 அன்று நீதிபதி எம்.துரைசாமியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, நீதிபதி வாகனத்தை பதிவு செய்ய ஆர்டிஓவுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு காருக்கான நுழைவு வரியில் விலக்கு கோரி மற்றொரு ரிட் மனு தாக்கல் செய்திருந்தார் நடிகர் தனுஷ். இந்த மனு உத்தரவிற்காக நேற்று செவ்வாய்க்கிழமை பட்டியலிடபட்டது. இந்த வழக்கு தொடர்பாக நாளை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பிக்க உள்ளார். சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்ட நடிகர் விஜயின் வழக்கை இதே உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தான் விசாரித்து உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், மாநில அரசுகளுக்கு நுழைவு வரி வசூலிக்க அதிகாரம் உள்ளதாக 2019-ல் தீர்ப்பளித்தது என்பது இங்கு நினைவுகூற தக்க ஒன்று.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.