விஜய்யின் சர்கார் பட விவாகரம் குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியுடன் விவாதிக்க தாயாரக இருப்பதாக சிம்பு கருத்து தெரிவித்திருந்த நிலையில், சிம்புவின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று அன்புமணி கூறியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியது.
இதனைத் தொடா்ந்து நடிகா் சிம்பு , நடிகா்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை நீக்க வேண்டும் என்று அன்புமணி உள்ளிட்டோா் வலியுறுத்துகின்றனா். அவா் சம்மதிக்கும் பட்சத்தில் நடிகா் என்ற முறையில் அன்புமணி ராமதாசுடன் ஒரே மேடையில் விவாதம் நடத்த தயாா் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி “நடிகர் விஜய்க்கு சர்கார் படம் விவகாரத்தில் நல்லது தான் கூறினேன். விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நல்ல உடல் நலத்துடன் நன்றாக இருக்க வேண்டும், புற்றுநோயால் பாதிக்கப்பட கூடாது, என்பது தான் எனது விருப்பம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ சிம்புவின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடா்பாக விவாதிக்க நடிகா் சங்கம் ஏற்பாடு செய்தால் அதில் பங்கேற்று விவாதிக்க தயாராக இருக்கிறேன் “ என்றார்.