கமல்ஹாசன் தனிக் கட்சி : ‘பிப்ரவரி 21-ம் தேதி ராமநாதபுரத்தில் அறிவிப்பேன்’ என்கிறார்

கமல்ஹாசன் தனிக்கட்சியின் பெயரை பிப்ரவரி 21-ம் தேதி ராமநாதபுரத்தில் அறிவிப்பேன் என கூறியிருக்கிறார். தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

கமல்ஹாசன் தனிக்கட்சியின் பெயரை பிப்ரவரி 21-ம் தேதி ராமநாதபுரத்தில் அறிவிப்பேன் என கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

கமல்ஹாசன், அரசியலுக்கு வர இருப்பதை ஏற்கனவே உறுதி செய்துவிட்டார். ட்விட்டர் மூலமாக அதிரடியாக அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரது கருத்துகள் அரசியல் தளத்தில் விவாதங்களை கிளப்பி வருகின்றன.

கமல்ஹாசன் கள அரசியலுக்கும் தயாராகிவிட்டதை அவரது நேற்றையை (ஜனவரி 16) அறிக்கை புலப்படுத்தியது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் துவக்கமாக எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து வருகிற பிப்ரவரி மாதம் 21-ம் தேதி துவக்க இருக்கிறேன்.

ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி.

இதை மக்களோடு மக்களாக நின்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21-ம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தை துவக்க இருக்கிறேன். இது என் நாடு, இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று பின்பற்றவே தலைவன் இருக்க வேண்டும்.

பின் தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்க வேண்டும், நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம் அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் நான் சென்றுகொண்டிருக்கிறேன்.

இது ஆட்சியைப் பிடிக்க திட்டமா? என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு குடியின் அரசு அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதை நோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தை தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசன் அதற்கு முன்பாகவே கட்சியை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close