சென்னை, போரூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவமனையில் இன்று (பிப் 11) காலை 7 மணி முதல் அதிகப்படியான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகை தந்துள்ளனர். இந்நிலையில், நடிகர் கஞ்சா கருப்பும் இதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, காலை முதலே மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் குற்றம்சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் நடிகர் கஞ்சா கருப்பும் இணைந்து போராட்டம் நடத்தினார்.
இந்த மருத்துவமனைக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், சரியான நேரத்திற்கு இங்கு மருத்துவர்கள் வருவதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு இடையூறாக இருக்கும் எனக் கூறி மருத்துவ துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை காவலாளிகள் ஆகியோர் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர். இதனிடையே, கடும் மூச்சுத் திணறல் பாதிப்புடன் மருத்துவமனைக்கு வந்திருந்த ஒரு மூதாட்டியை, மருத்துவர்கள் இல்லாததால் வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.
இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சூழலில் மருத்துவமனை விவகாரம் தொடர்பாக மாநகராட்சி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "மூன்று மருத்துவர்கள் இருக்க வேண்டிய நேரத்தில் ஒரு மருத்துவர் மட்டும் காலதாமதமாக வந்தார்.
இதன் காரணமாக சிறிது நேரம் சிகிச்சை பாதிக்கப்பட்டது. மூன்றாவது மருத்துவரும் வந்த பின்னர், பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.