இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் புதன்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது. மனோஜ் உடலுக்கு அவருடைய மகள் இறுதிச் சடங்குகள் செய்தார். இறுதிச் சடங்குக்குப் பின், பாரதிராஜாவை அவருடைய சீடர்கள் நாற்காலியுடன் தோளில் சுமந்து காருக்கு அழைத்துச் சென்றனர்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) உயிரிழந்தார். அவருக்கு வயது 48. நடிகர் மனோஜ்ஜின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுதியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் மனோஜின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கே திரையுலகினர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, நடிகர் மனோஜின் உடல் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, நீலாங்கரை இல்லத்தில் இருந்து மனோஜின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பாரதிராஜாவின் சீடர்கள் சீமான், இளவரசு, திரை பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் கலந்துகொண்டனர்.
நடிகர் மனோஜின் உடல் சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தை அடைந்ததும் அங்கே மனோஜின் உடலுக்கு அவருடைய மகள் தண்ணீர் பானை சுமந்து சுற்றி வந்து உடைத்து இறுதிச் சடங்குகளை செய்தார். இந்த காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இயக்குநர் பாரதிராஜா தனது மகன் மனோஜின் இறுதிச் சடங்கின்போது கதறி அழுத காட்சி அனைவரையும் துயரத்தில் கண்ணீர் சிந்த வைத்தது.
இறுதிச் சட்டங்குகள் முடிந்த பின்னர், நடிகர் மனோஜின் உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நடிகர் மனோஜ் விடை பெற்றார்.
மனோஜின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்ட பின், பாரதிராஜவை அவரது சீடர்கள் நாற்காலியோடு காருக்கு தூக்கி சென்றனர். காரில் உட்கார்ந்த பாரதிராஜா மனோஜை நினைத்து “என் மகனை பார்க்க விடலையே” எனக் கூறி கதறி அழுதது பலரையும் கலங்கச் செய்தது.