பசுமை வழிச்சாலை அமைப்பது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி நடிகர் மன்சூர் அலிகான் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர்அலிகான் நேற்று கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு வந்தார். அங்குள்ள பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார். பின்னர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் மரக்கன்றுகளை நட்டார்.
அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய மன்சூர், "நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது. மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன்" என்றார்.
இதையடுத்து, சென்னை சூளைமேட்டில் உள்ள மன்சூர் அலி கானின் வீட்டில் வைத்து சேலம் தீவட்டப்பட்டி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரை போலீசார் சேலம் அழைத்துச் செல்கின்றனர்.
கைது குறித்து மன்சூர் அலி கான் கூறுகையில், 'சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைத்தால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படும். மலைகளை குடைந்து சாலைகள் அமைத்தல் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படும். தமிழர்களாய் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சனையை எதிர்ப்போம். தமிழகத்தில் மக்களாட்சி என்ற பெயரில் ரத்தக் காட்டேரி ஆட்சி நடைபெறுகிறது' என்று தெரிவித்துள்ளார்.
More Details awaited...