டெங்கு வராமல் தடுக்க நடிகர் மயில்சாமியின் மகத்தான ஐடியா சொல்கிறார். அவரே களமிறங்கி அதை செயல்படுத்துவதுதான் சூப்பர்!
டெங்குவால் தமிழ்நாடே தவித்துக் கொண்டிருக்கிறது. ‘தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள்...’ என சுகாதார அதிகாரிகள் ஒருபக்கம் மைக்செட் போட்டு கத்திக் கொண்டிருந்தாலும், டெங்குவால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
டெங்குவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மகத்தான ஐடியா ஒன்றைச் செயல்படுத்தி வருகிறார் காமெடி நடிகர் மயில்சாமி. ஒவ்வொரு படத்துக்கும் சம்பளத்தை உயர்த்தி கல்லாவை நிரப்பிக் கொள்ளும் நடிகர்களுக்கு மத்தியில், மயில்சாமியின் இந்த செயல் ஆச்சரியமாக இருக்கிறது.
அப்படி அவர் என்னதான் செய்கிறார் என்கிறீர்களா? இதுவரை கிட்டத்தட்ட 8000 பேருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கியிருக்கிறார் மயில்சாமி. சுத்தமான கேன் தண்ணீரில் நிலவேம்பு, பப்பாளி இலை, மிளகு, சீரகம், பனங்கற்கண்டு போட்டு காய்ச்சி, வடிகட்டி கேன்களில் எடுத்துக் கொண்டுபோய், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இலவசமாக விநியோகம் செய்து வருகிறார். மக்களும் அதை ஆர்வத்துடன் வாங்கி குடித்து, மயில்சாமியை வாழ்த்தவிட்டுச் செல்கின்றனர்.
எப்படி இந்த ஐடியா வந்தது? ‘ஐஇ தமிழ்’க்காக மயில்சாமியிடம் பேசினோம்...
“தர்மசிந்தனை என்பது ரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும். எனக்கு அப்படிப்பட்ட சிந்தனை, எம்.ஜி.ஆரால் வந்தது. அவருடைய படங்களைப் பார்த்துப் பார்த்து, எனக்குள்ளாகவே தர்மசிந்தனை வந்துவிட்டது. நாளைக்கு என்று பெரிதாக எதுவும் வைத்துக் கொள்ளாமல், இன்றைக்கு என்னிடம் இருப்பதைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்வேன்.
ஊர் முழுக்க டெங்கு பாதிப்பால் பலர் இறந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, நம் மக்களுக்கு அது வராமல் தடுக்க வேண்டுமே எனத் தோன்றியது. உடனடியாகக் களத்தில் இறங்கிவிட்டேன். ஒரு இடத்தில் கேம்ப் போல போட்டால், எல்லோரும் வந்து குடிக்க மாட்டார்கள் என்பதால், ஒரு குட்டி யானையை (வண்டி) எடுத்துக்கொண்டு நானே கூட்டம் இருக்கும் பகுதிகளுக்குச் சென்று வழங்கினேன்.
நேற்று ‘சண்டக்கோழி 2’ படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு, தன் கையாலேயே நிலவேம்பு கஷாயத்தை வழங்கினார் விஷால் சார். கிட்டத்தட்ட 500 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் அங்கு இருந்தார். விஷால் சாரும் கஷாயத்தைக் குடித்தார். ‘உங்களைப் பார்த்து நிறைய பேரு இதுமாதிரி செய்வாங்க’ என்று பாராட்டினார்.
எம்.ஜி.ஆர். போல உயிர் உள்ள வரைக்கும் மக்களுக்காக நல்லது செய்ய ஆசைப்படுறேன். இந்த ஒருமுறை மட்டுமல்லாம, வாரா வாரம் நிலவேம்பு கஷாயம் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். அடுத்தபடியா, எல்லா ஆறு, குளங்களையும் தூர்வாரும் ஐடியா இருக்கிறது” என்கிறார் மயில்சாமி.
சாலிகிராமம் பக்கம் நீங்கள் போகும்போது கூட்டமாக நிலவேம்பு கஷாயம் குடித்துக் கொண்டிருந்தால் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அவர்களுக்கு கஷாயம் கொடுப்பது மயில்சாமியாக இருக்கக் கூடும்.