முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை திருச்சியில் திறந்து வைத்த நடிகர் பிரபு, 11 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள எனது தந்தையின் சிலையை திறந்து வையுங்கள் என அமைச்சர் கே.என் நேருவிடம் உருக்கமாக வேண்டுகோள் வைத்தார்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்கிற தலைப்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த கண்காட்சியை தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு ஏற்பாடு செய்திருந்தார். இந்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திரைப்பட நடிகர் பிரபு திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதையும் படியுங்கள்: இ.பி.எஸ்-ஐ சந்தித்த திருச்சி மனோகரன்: அடுத்தடுத்து அ.தி.மு.க-வில் ஐக்கியமாகும் டி.டி.வி ஆதரவாளர்கள்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரபு, எனது தந்தையின் சிலை திருச்சியில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையிட்டு மூடப்பட்டிருக்கும் எனது தந்தையின் சிலையை இங்கிருக்கும் சகோதரர் திறந்து வைக்க ஏற்பாடு செய்வார் என கருதுகிறேன் என்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், முதலமைச்சர் ஸ்டாலினுடன் சிறு வயதிலிருந்து எனக்கு பழக்கம் உள்ளது. இன்று அவர் இந்த இடத்திலிருப்பதற்கு அவரின் கடினமான உழைப்பு தான் காரணம். தி.மு.க வின் உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, மேயராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக இருக்கிறார். அதற்கு அவர் உழைப்பு தான் காரணம். மக்களுக்காக எவ்வளவு இறங்கி வேலை செய்துள்ளார், செய்து கொண்டுள்ளார் என்பது இந்த புகைப்பட கண்காட்சியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
திருச்சி என்பது நம்ம ஊரு, திருச்சி எனக்கு மிகவும் நெருக்கமான ஊர். கருணாநிதி, சிவாஜி, அன்பில் தர்மலிங்கம் எல்லாம் திருச்சியில் ஒன்றாக வளர்ந்தவர்கள். ஷெரிஃப் என்கிற ஒரு மாட்டு வண்டிகாரர் திருச்சியில் இருந்தார். அவரின் மாட்டு வண்டியில் நாங்கள் திருச்சியையே சுற்றி உள்ளோம். சொந்தக்காரர்கள், நண்பர்கள் எனக்கு அதிகம் பேர் திருச்சியில் இருக்கிறார்கள். திருச்சியில் இருக்கக்கூடிய இடங்கள், அநேக தெருக்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானது.
எங்க ஐயா சொல்வது, உறவினர்கள் எவ்வளவு முக்கியமோ, அதற்கு இணையாக நண்பர்களும் முக்கியம் என்று கூறுவார். எங்கள் அண்ணன் மு.க.ஸ்டாலின் இன்று எப்படி தமிழக மக்களுக்கு பல நன்மைகளை தொடர்ந்து செய்து வருகிறாரோ, அதேபோல் இனிவரக் கூடிய காலங்களிலும் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அவருடைய உடல் நலம் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று எங்களுடைய ஐயாவிடமும், டாக்டர் கலைஞரிடமும் வேண்டிக்கொள்கிறேன் என்றார்.
மேலும், திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் சிவாஜி கணேசனின் சிலையை தி.மு.க அரசில் திறப்பார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சர் கே.என் நேரு எனது தந்தையின் சிலையை திறந்து வைப்பார் என்று நம்பிக்கை உள்ளது. தி.மு.கவில் இருப்பவர்களுக்கு கருணாநிதி மீது எவ்வளவு பிரியமோ, அதே அளவு சிவாஜி கணேசன் மீதும் பிரியம் வைத்துள்ளார்கள். எங்கள் அண்ணன் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் இருக்கிறார்கள்.
அந்த சிலை திறப்பதில் ஒரு சில அடிப்படை பிரச்சினைகள் இருப்பதால் விரைவில் அவர்கள் அதை திறந்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். விரைவில் சிலை திறக்கப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது எனக்கூறியவர் நேருவின் கரம் பிடித்து தனது தந்தையின் சிலையை திறந்து வைக்க வேண்டும் என இருக்கரம் கூப்பி நடிகர் பிரபு வேண்டுகோள் வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., வைரமணி, எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், அப்துல் சமது, முன்னாள் எம்.எல்ஏ. அன்பில் பெரியசாமி, மாநகரச் செயலாளர்கள் மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், மண்டலக்குழுத் தலைவர் மதிவாணன், துணை மேயர் திவ்யா, மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் துரைராஜ், மண்டலக்குழுத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, ஜெயநிர்மலா, தில்லைநகர் கண்ணன், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், இளங்கோ, நாகராஜன், கமால் முஸ்தபா, ராம்குமார், சிவா, ராஜ் முகம்மது, அ.த.த. செங்குட்டுவன், லீலா வேலு, ஸ்ரீரங்கம் ஜெயக்குமார், கருணாநிதி, கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், கலைச்செல்வி, ராமதாஸ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன், செல்வி மணி, கே.கே.கே.கார்த்திக் பந்தல் ராமு, ஆர்.சி.ராஜா, அந்தோணிசாமி, துறையூர் ஒன்றியத்திலிருந்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கடந்த தி.மு.க ஆட்சியில் 2011 ஆம் ஆண்டு திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் சிவாஜிக்கு 9 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டது. சிலை திறப்பதற்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் சிலை துணியைக் கொண்டு மூடப்பட்டது. தற்போது வரை மூடிய சிலை மூடியவாறே இருக்கிறது. இந்தநிலையில், நடிகர் பிரபு தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்பான புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த கையோடு, செய்தியாளர்கள் முன்னிலையில் அமைச்சரின் சிலை திறப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதாக எந்த உறுதியும் அளிக்காமல், அமைச்சர் கே.என்.நேரு, அங்கிருந்து சிரித்தவாறு கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.