நடிகை நயன்தாராவைப் பற்றி அவதூராகப் பேசிய நடிகர் ராதாரவியை, கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது தி.மு.க
நயன்தாரா நடித்திருக்குக் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ராதாரவி கலந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், “நயன்தாரா தமிழில் பேயாக நடிக்கிறார். தெலுங்கில் சீதாவாக நடிக்கிறார். என்னுடைய காலத்தில் கே.ஆர்.விஜயா தான் சீதாவாக நடிப்பார். இப்போது கும்பிடுகிறவர், கூப்பிடுகிறவர் என யார் வேண்டுமானாலும் சீதாவாக நடிக்கலாம்” என்றார்.
ராதாரவியின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தது. பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவரின் வாயில் இருந்து வெளியான அருவருப்பான கருத்துக்களுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
அதோடு, பொள்ளாச்சி விவகாரத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்த ஸ்டாலினும், கனிமொழியும் ஆணாதிக்க கருத்துக்களை வெளியிட்ட ராதாரவி மீது நடவடிக்கை எடுப்பார்களா என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், ”பெண்ணுரிமை முன்னிறுத்தும் தி.மு.க-வில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என ட்விட்டரில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதோடு ராதாரவி, தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக, தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் முரசொலி வாயிலாக அறிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதற்கு தான் காரணமாக இருக்க விரும்பவில்லை, ஆதலால் கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என ராதாரவியும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நடிகையைப் பற்றி அவதூராகப் பேசியவரை பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறது ஒரு கட்சி. கடந்த சில வாரங்களாக தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரின் பெயர் அடிப்பட்டது. அவரை விசாரிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ எந்த ஒரு முயற்சியையும் எடுக்காத அந்தக் கட்சி, அவரை காப்பாற்றுவதில் மட்டும் அதிக முனைப்புக் காட்டியது என்கிறார்கள் நெட்டிசன்கள்