/tamil-ie/media/media_files/uploads/2020/07/template-2020-07-23T164854.969.jpg)
நடிகர் ரஜினிகாந்த், தனது பண்ணை வீட்டுக்கு காரில் சென்ற போட்டோ, இரண்டு தினங்களுக்கு முன் வெளியாகி அவரது ரசிகர்களால் வைரல் ஆனது. இந்த போட்டோ வைரலானதைவிட, அவர் இ-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றாரா என்ற கேள்வி பல்வேறு தரப்புகளிலிருந்து எழுந்தது.
சென்னை மாநகராட்சி விசாரணை : ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கித்தான் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சென்றாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்த நிலையில், அவர் இ-பாஸுடன் தான் கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) சென்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்கிறது : தமிழக அரசின் இ-பாஸ் விதிமுறைகளின்படி, நெருங்கிய உறவினர்களின் திருமணம் அல்லது இறப்பு, மருத்துவ அவசரம் ஆகிய மூன்று காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. ரஜினி பெற்ற இ-பாஸில் மருத்துவ அவசரம் என்று காரணம் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி தெரிவித்தபோது, தன் மகளைப் பார்க்கச் சென்றதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், மருத்துவ அவசரம் என்று காரணம் காட்டி, தன் மகளைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்று கேட்டால், ரஜினி போன்ற வி.ஐ.பி.களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ரஜினிக்கு எதன் அடிப்படையில் இ-பாஸ் வழங்கப்பட்டது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. அது இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகத் மாநகராட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இ-பாஸ் கிடைக்காததால் தற்கொலை : சில நாட்களுக்கு முன், கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவியைப் பார்க்க செல்ல இ-பாஸ் கிடைக்காததால் காஞ்சிபுரத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.