நடிகர் ரஜினிகாந்த்க்கு (actor rajinikanth) எதிராக வழக்கு தொடர்ந்த சினிமா பைனான்சியர் போத்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 25 ஆயிரம் அபராதம் விதித்தது. ரஜினிக்கு எதிரான வழக்கை நீதிபதி சதீஸ்குமார் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவுவிட்டார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் சம்பந்தியும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா, சினிமா ஃபைனான்சியர் போத்ராவிடம், ரூ.65 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அவர் பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்று சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் போத்ரா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ‘‘பணத்தை நான் திருப்பி தரவில்லை என்றால், என்னுடைய சம்பந்தி நடிகர் ரஜினிகாந்த் பணத்தை திருப்பி தருவார் என்று கஸ்தூரிராஜா சொன்னார். எனவே ரஜினிகாந்த் அந்த பணத்தை திருப்பித் தர உத்தரவிட வேண்டும்’’ குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்ற விசாரணையின் போது கஸ்தூரி ராஜா இந்த குற்றச்சாட்டை மறுத்தார். இதையடுத்து வழக்கு தள்ளுபடியானது.
இந்நிலையில் அதே மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஃபைனான்சியர் போத்ரா தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஸ்குமார், ‘‘இது போன்ற வழக்குகளை ஏற்க முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இந்த வழக்கை தொடர்ந்த போத்ரா, ரஜினிகாந்த்க்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்’’ என நீதிபதி உத்தரவிட்டார்.