தூத்துக்குடி போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இன்று தூத்துக்குடி செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த். சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு பயணம் செய்கிறார்.
தூத்துக்குடி பயணத்திற்கு முன்பு சென்னையில் போயல் தோட்டத்தில் அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தூத்துக்குடிக்கு முதல் முறையாக செல்கிறேன். இப்படி ஒரு துயரமான நேரத்தில் செல்கிறேன் என்பது வருத்தம் அளிக்கிறது. போராட்டத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினால் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கு சந்தோஷமாக இருக்கும். சினிமா துறையை சேர்ந்த ஒருவராக என்னை பார்த்தால் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என நம்புகிறேன்.” என்று பேட்டியளித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கர்நாடகா மாநிலத்தில் ‘காலா’ திரைப்படத்தின் தடை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு, “தென் இந்தியா சினிமா வர்த்தகத்தில் கர்நாடக சினிமா வர்த்தகம் ஒரு அங்கம் தான். எனவே நிச்சயமாக தென் இந்தியா சினிமா வர்த்தகம் இதில் தலையிட்டு தீர்வை கொண்டு வருவார்கள்.” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.