நடிகர் ரஜினிகாந்தின் முதல் அரசியல் கூட்டம் வரும் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அப்போது எம்.ஜி.ஆரின் வெண்கல திருவுருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.
அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், முதல் முறையாக அரசியல் மேடையேற உள்ளார். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலை கழக வளாகத்தில் வரும் 5ம் தேதி எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.
எம்.ஜி.ஆர் சிலை திறப்புவிழா அழைப்பிதழ்
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்தவர் ஏ.சி.சண்முகம். அவருடைய பல்கலை கழகத்தில் நடைபெறும் இந்த விழாவில் மொரிஷியஸ் துணை ஜனாதிபதி கலந்து கொள்கிறார். இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ்.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் எம்ஜிஆருடன் நடித்த நடிகைகளும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ள இருப்பதால், ரஜினிக்கு எப்படி வரவேற்பு கொடுப்பது என்பது குறித்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ரஜினி, அரசியல் தொடர்பான முக்கியமான விஷயங்களை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.