'இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர்கள்?' - பாமகவில் இருந்து வெளியேறிய நடிகர் ரஞ்சித்

நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த கட்சியில் சேர்ந்தேன். ஒரு நொடிப் பொழுதில் எனது கனவு தகர்ந்தது

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக 7+1 என்ற கணக்கில் சீட் பெற்றது. ‘இனி எக்காலத்திலும் திராவிட கழகங்களுடன் கூட்டணி கிடையாது’ என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், ஆளும் அதிமுக அரசை மிகக் கடுமையாக விமர்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்த ராமதாஸ், தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்குந்த அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிலும், 1 மாநிலங்களவை சீட் பெற்றது ராமதாஸின் மெகா மூவ் என்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த 23ம் தேதி தனது தைலாபுரம் தோட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கு தடபுடலாக விருந்து வைத்தார் ராமதாஸ்.

பொதுவாக, அரசியல் களத்தில் கட்சிகளை போன வாரம் விமர்சிப்பதும், இந்த வாரம் கூட்டணி வைப்பதும் சர்வ சாதாரணமான நிகழ்வு தான் என்றாலும், பாமக ஒருபடி மேலே சென்று திராவிட கழகங்களை மிகக் கடுமையாக விமர்சித்து வார்த்தைகளை விட்டது. ஆனால், அவற்றையெல்லாம், ஒரே தேர்தலில் நீர்த்துப் போகச் செய்யும்படி அதிமுகவில் இணைந்தது தான் பாமக தற்போது சந்திக்கும் அதிக எதிர்ப்புக்கு ஒரே காரணம்.

பாமக – அதிமுக – பாஜக கூட்டணியை நியாயப்படுத்த ராமதாஸும், அன்புமணியும் தற்போது அதிக சிரத்தை எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், ‘அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?’ என்று தீர்மானத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்பதை விளக்க, நேற்று அன்புமணி ராமதாஸ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தினார். அதில், பல கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அவர் திணறினார். இதனால், பாதியிலேயே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டு அன்புமணி வெளியேறினார்.

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில், செய்தியாளர்களை தைரியமாக அன்புமணி சந்தித்ததை பாராட்ட வேண்டும் என்றாலும், பல கேள்விகளுக்கு அவரால் நேரடியாக பதில் சொல்லவே முடியவில்லை.

இந்தச் சூழ்நிலையில், இன்று நடிகரும் பாமகவின் மாநில துணைத்தலைவருமான ரஞ்சித், அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி, அக்கட்சித் தலைமையை மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “4 பேருக்கு கூஜா தூக்கிக் கொண்டு என்னால் வாழ இயலாது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் மக்களை பாமக ஏமாற்றும். இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றி விட்டது.

நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த கட்சியில் சேர்ந்தேன். ஒரு நொடி பொழுதில் எனது கனவு தகர்ந்தது. எனது அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். 8 வழிச் சாலைக்காக நான் மக்களை சந்தித்தேன். அதில் வழக்கு போட்டார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதை ஒரு நொடி நினைத்து பார்த்தார்களா? எப்படி கூட்டணி அமைக்க முடிந்தது?.


முதல்வரையும் மாறி மாறி மடையன், பொறம்போக்கு, அடிமை, ஆண்மை அற்றவர்கள் என ஒரு மாதம் முன்பு வரை பேசி விட்டு, எப்படி அவர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள்? என்னால் ஜீரணிக்க முடியவில்லை. தினமும் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தினமும் செத்து கொண்டு இருக்கிறார்கள். நாமும் இதை நினைப்பது இயல்பு தானே. நல்ல ஒரு தலைவன் முதல்வர் வரமாட்டாரா என்று. அதற்காக தான் அன்புமணியை தேர்ந்தெடுத்தோம்.

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்று சொல்கின்றனர். இது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை. மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து எதுவும் செய்யாதவர்கள், இப்போதா செய்யப் போகிறார்கள்? இதில் என்ன நாடகம் என்றால், உள்ளாட்சி தேர்தல் வரை ஒற்றுமையாக இருப்பார்கள். பின்பு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று கூறி கூட்டணியில் இருந்து விலகி எதிரியாகிவிடுவார்கள். மறுபடியும், இவர்களுக்காக இளைஞர்கள் கொடியை தூக்கி வேலை செய்ய வேண்டும்.

“10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்; நாங்கள் உங்களுடன் கூட்டணி வைக்கிறோம் என்று சொல்லி இருந்தால், உயிரைவிட்டு நான் வேலை செய்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாமக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜேஸ்வரி பிரியா விலகிய நிலையில், தற்போது பாமக மாநில துணைத் தலைவர் ரஞ்சித் கட்சியில் இருந்து வெளியேறியிருப்பது, பாமகவின் அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கி இருக்கின்றனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close