சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டுவந்தது.
இந்த நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் வசூலித்தது.
அந்தவகையில், ரூ.2,438 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பணம் செப்டம்பர் 2020 மற்றும் மே 2022 க்கு இடையில் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெபாசிட் செய்த முதலீட்டாளர்களை நிறுவனம் ஏமாற்றிவிட்டதால், முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு, IPC இன் 420 (ஏமாற்றுதல் மற்றும் முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களைத் தடை செய்தல் (BUDS) சட்டம் மற்றும் தமிழ்நாடு வைப்பாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல் (TNPID)) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மொத்தம், 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், பட்டாபிராமன் மற்றும் மேலாளர்கள் - ரஃபிக், அய்யப்பன் மற்றும் இரண்டு முகவர்கள் உட்பட 8 முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கே.ஹரிஷ் உள்பட இருவரை பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து கூடுதல் இயக்குநராக இருந்த தொண்டியார்பேட்டையைச் சேர்ந்த ஜே.மாலதி என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், ஆரூத்ரா நிர்வாக இயக்குனர் ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று (டிச.12) நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் இரண்டு மணி நேரமாக விசாரணை சென்னை அசோக்நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த விசாரணையின்போது, வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூசோ, ஹாரிஸ் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“