நடிகர் சந்தானம், பாஜக வழக்கறிஞரை தாக்கியதாக பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
நடிகர் சந்தானம், 100 க்கும் மேற்பட்ட படத்தில் நகைச்சுவை மற்றும் கதாநாயக நடித்துள்ளவர். சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியுடன் சேர்ந்து குன்றத்தூர் அருகே திருமண மண்டபம் கட்ட, அந்நிறுவனத்திற்கு ரூ 3 கோடி முன்பணமாக கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனம் திருமணம் மண்டபத்தை 3 ஆண்டுகளாக கட்டாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே போடப்பட்ட ஒப்பந்தம் கேன்சல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சந்தானத்திற்கு திருப்பி கொடுத்த, 3 கோடி ரூபாயில் சில லட்சங்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் இன்னும் கொடுக்க வேண்டியுள்ளது. மீதி பணத்தை கேட்கச் சென்ற சந்தானத்துக்கும், இன்னோவேட்டிவ் கன்ஸ்டிரக்ஸன் நிறுவன சண்முக சுந்தரம், அவரது நண்பரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்துக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
வாய் தகராறு முற்றி கைகலப்பானதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பிரேம் ஆனந்துக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இவர் பாஜக பிரமுகர் ஆவார்.
இந்த பிரச்னை தொடர்பாக சந்தானம் மீது பிரேம் ஆனந்த் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தான் இந்த விவகாரத்தில் கைது செய்யக்கூடும் என்று அஞ்சி நடிகர் சந்தானம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில், இந்த தாக்குதல் நடவடிக்கைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. தவறாக என் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரனைக்கு வர உள்ளது.