தமிழக சட்டசபையில் ஆளுனர் – முதல்வர் இடையே நடந்த நிகழ்வுகளுக்கு நடிகர் சத்யராஜ் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. ஆளுனர் உரையுடன் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதை போன்று ஆளுனர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதில் தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில், திராவிட மாடல், காமராஜர், அம்பேத்கர் கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை குறிப்பிடாமல் கடந்து சென்றுவிட்டார். மேலும் தேசிய கீதம் பாடும் முன்பே அவையில் இருந்து வெளியேறிவிட்டார்.
ஆளுனர் ஆர்.என்.ரவி வாசித்த உரை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு தயாரித்த ஆங்கில உரை மற்றும் சபாநாயகர் வாசித்த தமிழ் உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததை தொடர்ந்து, ஆளுனர் ஆர்.என்.ரவி அவயைில் இருந்து உடனடியாக வெளிநடப்பு செய்தார்.
ஆளுனரின் இந்த செயல் குறித்து அரசியல் கட்சித்’ தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் சட்டசபையில் இருந்து ஆளுனர் வெளிநடப்பு செய்வது இதுவே முதல்முறை என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும் ஆளுனர் ஆர்.என்.ரவி வெளியில் செல்லும்போது முதல்வர் ஸ்டாலின் தனது லேசான புன்னகையை வெளிப்படுத்தியது இணையத்தில் வைரலாக பரவியது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மத்திய அரசுக்கு எதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், ஆளுனருக்கும் திமுக அரசுக்கும் இடையே மோதல்’ போக்கு நீடித்து வந்தது. ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் தொடர்பான மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தது கூட அரசியல் காரணங்கள் தான் என்றும், ஆளுனர் அரசியல் செய்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த மோதல் சட்டசபை நடவடிக்கையில் மேலும் தீவிரமடைந்துள்ளது. நேற்று சட்டசபையில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து காலையில் சென்னையில் பல இடங்களில் கெட் அவுட் ரவி என்று, திமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியது பெரும் வைரலாக பரவியது. ஆளுனர் அரசை அவமதித்து விட்டதாக திமுகவும், ஆளுனரை திமுக அரசு அவமதித்துவிடடதாக பாஜக அரசும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால் சமூக வலைதளம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்து நடிகர் ரத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில் பேசும் சத்யராஜ்,
“மனிதருக்கு அழகு சிரிப்பு. சிரிப்பை விட அழகானது புன்னகை. சமீபத்தில் ஒரு புன்னகை என்னை ரொம்பவே கவர்ந்தது. அது, சட்டசபையில், நமது தமிழ்நாடு முதல்வர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் புன்னகை. அந்தப் புன்னகையில் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சுயமரியாதை சுடர்விட்டது. பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பளிச்சிட்டது. கலைஞர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி கிளர்ந்தெழுந்தது.
தமிழ்நாடு எனும் மாநிலத்தில் வாழும் ஒரு சாதார குடிமகனாக முதல்வரின் புன்னகையில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். காலரை கூட தூக்கி விட்டுக் கொள்கிறேன். HATSOFF TO OUR CM முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என சத்யராஜ் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“