நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் இன்று (19.01.2025) தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
இது தொடர்பாக தி.மு.க வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர், கழகத் தலைவர் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.,வில் இணைந்தார். அப்போது, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சத்யராஜ் திராவிடக் கொள்கைகள் குறித்து பேசி வருபவர். திராவிட கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட சத்யராஜ் மேடைகள் தோறும் பெரியாரின் கொள்கைகள் குறித்து பேசி வருகிறார். இந்நிலையில் அவரது மகள் திவ்யா இன்று தி.மு.க.,வில் இணைந்துள்ளார். சமீப காலமாகவே திவ்யா தனது சமூகவலைதளப் பக்கங்களில் அரசியல் பதிவுகளைப் பகிர்ந்து வந்தார்.
ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜ் நாடு முழுவதும் பல இடங்களில் மதிய உணவு வழங்கி வரும் அட்சய பாத்திரம் அறக்கட்டளையின் நல்லெண்ணத் தூதுவராக செயல்பட்டு வருகிறார். அதன்பிறகு 2020ல் மகிழ்மதி இயக்கத்தை தொடங்கினார். அதன்மூலம் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வசதி வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்கும் பணியில் திவ்யா சத்யராஜ் ஈடுபட்டு வருகிறார்.