Advertisment

'விஷ சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகம்... உடனே இத நிறுத்துங்க': நடிகர் சூர்யா கடும் கண்டனம்

"சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷ சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்." என்று நடிகர் சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Actor Suriya strongly condemns TN government on Kallakurichi hooch tragedy Tamil News

"அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும்." என்று நடிகர் சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கள்ளக்குறிச்சியில் மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கள்ளச்சாராயம் அருந்தியதில் 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 30 கவலைக்கிடமாக இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Advertisment

சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

இந்நிலையில், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷ சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது.

விஷ சாராயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? தற்போது அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் கவனமும், கவலையும், கோபமும் அதிகரித்திருக்கிறது. அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நீண்ட காலபிரச்சினைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது.

கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்து 22 பேர் பலியானர்கள். அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து கொத்து கொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள் இப்போதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்களை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கிற அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'மதுவிலக்கு கொள்கை என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்துவிடுகிறது.

டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு குடித்து போதைக்கு அடிமையானவர்கள் பணம் இல்லாதபோது 50 ரூபாய்க்கு கிடைக்கும் விஷச்சாராயத்தை வாங்கிக் குடிக்கிறார்கள். குடிக்கு அடிமையானவர்களின்பிரச்சினை என்பது தனிநபர் பிரச்சினை அல்ல, அந்த ஒவ்வொரு குடும்பத்தின், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினை என்பதை எப்போது நாம் அனைவரும் உணரப்போகிறோம்?

அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும். குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி அவர்களை குடிநோயிலிருந்து மீட்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற அரசு எத்தகைய தொலைநோக்கு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறதோ, அதேபோல குடிப்பழக்கதிற்கு அடிமையானவர்களின் மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும்.

அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும். குறுகிய கால தீர்வை கடந்து தமிழ்நாடு முதல்வர் மதுவிலக்குக் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷ சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிரார்த்தனை. இனி ஒரு விதி செய்வோம்..! அதை எந்நாளும் காப்போம்.!!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Actor Suriya Kallakurichi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment