மதுரை மாவட்டத்தில் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா, தருமபுரி மாவட்டத்தில் ஆதித்யா , திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த மோதிலால் ஆகிய மூன்று மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்த நடிகர் மற்றும் அகரம் அற்க்கட்டளை நிறுவனர் சூர்யா செய்திக் குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நீட் தேர்வு' பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு 'வாழ்த்து' சொல்வதற்குப் பதிலாக 'ஆறுதல்' சொல்வதைப் போல அவலம் எதுவுமில்லை. 'கொரோனா தொற்று' போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்' மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. 'தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை' என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள், 'அனல் பறக்க' விவாதிப்பார்கள்.
நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம்கூட அக்கறை இல்லாத நம் கல்வி முறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும்.
நமது பிள்ளைகளின் தகுதியையும் திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்த துணைநிற்பது போலவே, மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்படுத்த வேண்டும். அன்பு நிறைந்த குடும்பம், உறவு, நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு, தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம்.
மகாபாரத காலத்து துரோணர்கள் ஏகலைவன்களிடம் கட்டை விரலை மட்டுமே காணிக்கையாகக் கேட்டார்கள். நவீனகால துரோணர்கள் முன்னெச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதையெல்லாம் கடந்து படித்து முன்னேறுகிறவர்களை 'பலியிட' நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்.
ஒரே நாளில் 'நீட் தேர்வு' மூன்று மாணவர்களைக் கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும். நாம் விழிப்புடன் இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீவைக்கற 'நீட் தேர்வுக்கு' எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்"
என்று சூர்யா வேதனையுடன் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.