/indian-express-tamil/media/media_files/2025/09/27/namakkal-vijay-2025-09-27-10-10-00.jpg)
3-ம் கட்டப் பிரசார பயணம்: ரசிகர்கள் வெள்ளத்தில் நாமக்கலுக்குப் புறப்பட்ட விஜய்
தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க) தலைவரும் நடிகருமான விஜய், தனது மூன்றாம் கட்ட பிரசாரப் பயணத்தை இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேற்கொள்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் மாவட்டத்திற்குப் புறப்பட்டார்.
பிரசாரப் பயண விவரம்:
முதல் 2 கட்டப் பயணம்: திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் விஜய் தனது முதல் 2 கட்ட பிரசாரப் பயணத்தை மேற்கொண்டார்.
3-ம் கட்ட சந்திப்பு: 3-ம் கட்டப் பயணமாக இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.
தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விஜய், விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் மற்றும் கரூருக்குப் புறப்பட்டார். அவர் பயணம் செய்யும் வழித்தடமாக திருச்சி டிவிஎஸ் டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை, நம்பர் ஒன் டோல்கேட், முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் பிரசார இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 சொகுசு கார்களில் முதல் காரின் முன் இருக்கையில் அமர்ந்து விஜய் தனது பயணத்தைத் தொடங்கினார்.
விஜய் திருச்சிக்கு வந்ததை முன்னிட்டு, அவரை வரவேற்க திருச்சி விமான நிலையம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க, விமான நிலையம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக, திருச்சி விமான நிலையத்திற்குள் பயணிகள் மற்றும் அலுவல் நிமித்தமாகச் செல்லக்கூடியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் விமான நிலையம் வரும் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால், விமான நிலையம் அமைதியான சூழலில் காணப்பட்டது.
நாமக்கலில் த.வெ.க தலைவர் விஜய் இன்று பரப்புரை செய்ய உள்ள நிலையில், அங்குள்ள கே.எஸ்.திரையரங்கம் முன்பு தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். விஜய் பரப்புரை செய்ய உள்ளதால் நாமக்கல்லில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாமக்கல் - திருச்செங்கோடு செல்லும் வாகனங்கள் உழவர் சந்தை வழியாக செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சி செல்லும் வாகனங்கள் புறவழிச்சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.